அறிக்கை: இந்திய அமைச்சரின் சந்தித்துத் திரும்பிய உடன் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிப்பு பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
புதன்கிழமை, 13 ஜனவரி 2021 13:12 |
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுச் சின்னத்தை சிங்கள இராணுவம் தனது கைக்கூலிகளை ஏவி இடித்துத் தகர்த்து இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உலகத்தில் எந்த நாட்டிலும் இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் நினைவுச் சின்னங்களை அழிப்பது கிடையாது.
ஆங்கிலேயர் ஆட்சியில் பல்வேறு கொடுமைகளைப் புரிந்த ஆங்கிலேய அதிகாரிகளின் கல்லறைகள் இன்றும் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் உள்ளன. நாடு விடுதலை பெற்ற உடன் அவைகளை நாம் அழித்து விடவில்லை இன்னமும் அவை பத்திரமாக உள்ளன.
மறைந்தவர்களின் நினைவுச் சின்னங்களை அழிப்பது அநாகரிகமான பழக்கமாகும். அதை சிங்கள அரசு தொடர்ந்து செய்கிறது.
சில நாட்களுக்கு முன்பாக இலங்கை சென்றிருந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஈழத் தமிழருக்கு உரிமை மற்றும் நீதி வழங்குவது குறித்து இலங்கை அரசே முடிவு செய்யும் என அறிவித்ததின் விளைவாக சிங்கள அரசு மேலும் துணிவு பெற்று இந்த இழிசெயலை செய்துள்ளது. |