திங்கட்கிழமை, 27 ஏப்ரல் 2009 15:50 |
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : முதலமைச்சர் கருணாநிதி உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியதால் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டது என்பது போன்ற ஒரு தவறான தோற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிட்ட முயற்சி நடைபெறுகிறது.
உலக நாடுகளின் வேண்டுகோளை ஏற்று விடுதலைப்புலிகள் மட்டுமே போர்நிறுத்தம் செய்ய முன்வந்தனர். ஆனால் இலங்கை அதிபர் இராசபக்சே அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இன்று நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை சிங்கள இராணுவ விமானங்கள் ஈழத்தமிழர்கள் மீது குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளன. மேலும் சிங்கள அரசு இதுவரை அதிகாரப்பூர்வமாக போர் நிறுத்தத்தை அறிவிக்கவில்லை. அங்கு தற்போது போர் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. தமிழ்நாட்டு மக்களை தேர்தல் நேரத்தில் ஏமாற்றுவதற்காக கருணாநிதி திட்டமிட்டு நடத்திய இந்த நாடகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன். இலங்கையில் தமிழர்கள் தொடர்ந்து கொல்லப்படுவதை நிறுத்துவதற்கு உண்மையான முயற்சிகளைச் செய்யாமல் மக்களை ஏமாற்றும் வேலைகளில் ஈடுபடுவதை தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என எச்சரிக்கிறேன். |