அறிக்கை: தா. பாண்டியன் மறைவு – உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பு |
|
|
|
சனிக்கிழமை, 27 பெப்ரவரி 2021 18:01 |
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் மூத்தத் தலைவரான தா. பாண்டியன் அவர்களின் மறைவு உலகத் தமிழர்களுக்குப் பேரிழப்பாகும்.
இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் அகில இந்தியத் தலைமைக்கு ஈழத் தமிழர்களின் பிரச்னை குறித்து தெளிவுப் படுத்தி, அய்தராபாத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு பெரிதும் காரணமாக இருந்தார் என்பதை நன்றியுடன் நினைவுக் கூருகிறேன். அது மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் முக்கியத் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கும் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகவும் நடைபெற்ற பல்வேறுப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கெடுத்துக் கொண்டார். உலக அளவிலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கம்யூனிஸ்டுக் கட்சிகளுக்கு ஈழத் தமிழர் பிரச்னை குறித்து விளக்கி ஆதரவு தேடியவர்.
மறைந்த தலைவர் ஜீவா அவர்களால் உருவாக்கப்பட்டு அவரின் வாரிசாகவேத் திகழ்ந்து தன்னுடைய அளப்பறிய தொண்டின் மூலம் தமிழக மக்களின் உள்ளங்களில் என்றும் அழியாத இடம் பெற்றுள்ள தோழர் தா. பாண்டியன் அவர்களுக்கு உலகத் தமிழர்களின் சார்பில் வீர வணக்கம் செலுத்துகிறேன். |