பல்லாயிரக்கணக்கான மக்கள் கொலை - போர் நிறுத்தம் ஏற்படவில்லை PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 29 ஏப்ரல் 2009 15:51
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
தனது உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக இலங்கையில் போர் நிறுத்தம் முழுமையாக அமுல் படுத்தப்படும் என முதலமைச்சர் கருணாநிதி நம்பிக்கைத் தெரிவித்து இருக்கிறார்.
ஆனால் சிங்கள அரசு நேற்று பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி 5000-க்கும் மேற்பட்ட குண்டுகளை தமிழ் மக்கள் மீது வீசியுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் கிடைத்துள்ளன. ஆனால் இதை மழைக்குப் பின் ஏற்படும் தூவானமாக சொல்லி கருணாநிதி அலட்சியப்படுத்துகிறார்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறி தன்னையும் ஏமாற்றிக் கொண்டு தமிழக மக்களையும் ஏமாற்றுவதற்கு கருணாநிதி முயல்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தேர்தல் முடிவுகளை இலங்கைத் தமிழர் பிரச்னை எந்த அளவிலும் பாதிக்காது என்றும் கருணாநிதி கூறியிருக்கிறார். அப்படியானால் தேர்தல் வேளையில் எதற்காக உண்ணாவிரதம் இருந்தார் என்பதையும் அவசரம் அவசரமாக உதவிப் பொருட்களை தேர்தல் வேளையில் இலங்கைக்கு அனுப்பி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தது ஏன் என்பதையும் அவர் விளக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழர் பிரச்னைதான் மிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படவோ அல்லது அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதைத் தடுத்து நிறுத்தவோ காங்கிரசுக் கட்சியின் தலைமையில் இயங்கும் மத்திய அரசு எதையும் செய்யவில்லை என்பதையும் மத்திய ஆட்சி செய்த தவறுகளுக்கு கருணாநிதி துணை நிற்கிறார் என்பதையும் தமிழக மக்கள் நன்கு புரிந்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் விளைவு இந்த நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என எச்சரிக்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.