பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் - தலைவர்கள் வேண்டுகோள் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 17 மே 2009 16:49 |
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா. ம. க. நிறுவனர் மரு. இராமதாசு, ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை: ஈழத்தில் போர்ப் பகுதியில் இருந்து அனைத்து மக்களையும் வெளியேற்றி விட்டதாகவும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாரனின் உடலைக் கைப்பற்றி இருப்பதாகவும் இலங்கை அரசும் இந்தியாவில் உள்ள ஊடகங்களும் திட்டமிட்டப் பொய்ச் செய்தியைப் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்னவெனில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் போர்ப் பகுதியில் இன்னமும் இருக்கின்றனர். அவர்களை ஒட்டுமொத்தமாக அழிக்கும் திட்டத்துடன் சிங்கள இராணுவம் கொடூரத் தாக்குதலை மேற்கொண்டிருக்கிறது. இதில் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமுற்றுள்ளனர். குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் உட்பட காயம் பட்டவர்கள் மருத்துவ வசதியின்றி தெருக்களில் கிடக்கின்றனர். மக்களை காப்பாற்ற இராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் அனைத்து முன்னணி தளபதிகளும் விடுதலைப் புலிகளும் களத்தில் நின்று தீரத்துடன் போராடி வருகின்றனர். இந்த போர்ச் செய்தியையும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவல நிலையையும் மறைக்கவே இலங்கை அரசு பல பொய்ச் செய்திகளைப் பரப்பி வருகிறது. சாவின் விளிம்பில் நிற்கும் மக்களை காப்பாற்ற இந்தக் கட்டத்திலாவது அய்.நா-வும் உலக சமுதாயமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம். |