ஈழத் தமிழர் நலன் காக்க மே 21 வியாழக்கிழமை தமிழகமெங்கும் மக்கள் எழுச்சி பேரணி |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 19 மே 2009 16:50 |
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் கடந்த 5 மாத காலத்தில் சிங்கள இராணுவத் தாக்குதலின் விளைவாக சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்களும் போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானத் தமிழர்கள் உடல் உறுப்புகளை இழந்தும் படுகாயமடைந்தும் மருத்துவ வசதியின்றியும் உயிருக்காகப் போராடி வருகின்றனர்.
மேலும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் உணவு, மருந்து குடிநீர் இல்லாமல் சாவின் விளிம்பில் நிறுத்தப்பட்டுத் துடிக்கின்றனர். பாதுகாக்கப்பட்ட வலையங்கள் என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இராணுவக் காவலில் வைக்கப்பட்டுச் சித்ரவதைச் செய்யப்படுகின்றனர். போர் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூறி உலக நாடுகளை ஒரு புறம் ஏமாற்றிக் கொண்டு மறுபுறம் தமிழ் மக்கள் மீதான கொலை வெறித் தாக்குதலைச் சிங்கள இராணுவம் தொடர்ந்து நடத்தி வருகிறது. இனப் படுகொலைக்கு ஆளாகி வரும் ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க அய்.நா மன்றம் நேரடியாகத் தலையிட்டு மக்களை காக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள மக்கள் விடுவிக்கப்பட்டு அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும். போரில் இறந்தும் உடல் உறுப்புகளை இழந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும். திட்டமிட்ட இனப் படுகொலையில் ஈடுபட்ட சிங்கள அதிபர் மகிந்த இராஜபக்சே, சிங்கள இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோர் போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப் பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு அய். நா. மன்றம் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட அனைத்து நாடுகளையும் வலியுறுத்தும் வகையில் மக்கள் எழுச்சிப் பேரணியை மே 21 வியாழக் கிழமை மாலை 4 மணிக்கு சென்னையிலும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நடத்துவதென இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. சென்னையில் மன்றோ சிலையிலிருந்துப் புறப்பட்டுச் சேப்பாக்கம் வரை பேரணி நடைபெறும். இந்த பேரணிகளில் அனைத்துக் கட்சிகளும், அனைத்துத் தமிழர் அமைப்புகளும் மற்றும் தமிழ் உணர்வாளர்களும் கட்சி வேறுபாடின்றிப் பெருந்திரளாகக் கலந்து கொண்டு ஈழத் தமிழர்கள் அரசியல் பொருளாதார விடுதலை பெற ஒன்றுபட்டு நின்று சூளுரைக்க முன்வருமாறு வேண்டுகிறேன். |