வணங்காமண் - அறிக்கை நாடகங்களை நடத்தாதீர் - பழ.நெடுமாறன் கண்டனம் |
|
|
|
புதன்கிழமை, 10 ஜூன் 2009 16:53 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் இராணுவக் கட்டுப்பாட்டு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காக வெளிநாட்டுத் தமிழர்கள் திரட்டி அனுப்பி வைத்த நிவாரணப் பொருட்களுடன் வந்த வணங்காமண் கப்பலை இலங்கையரசு திருப்பி அனுப்பியதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இராணுவ முகாம்களில் உள்ள மக்கள் பட்டினியாலும், நோய்களுக்கு மருந்தின்றியும் கொஞ்சம் கொஞ்சமாகச் செத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் காப்பாற்ற எதுவும் செய்யாத சிங்கள அரசு அவர்களுக்கு அனுப்பப்பட்ட உதவிப்பொருட்களையும் வழங்கவிடாமல் திருப்பி அனுப்பியிருப்பது மனித நேயமற்ற கொடிய செயலாகும். இந்தச் சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுவதும் இலங்கைத்தமிழர்களுக்கு சட்டப்பூர்வமான உரிமைகள் வழங்கப்பட வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருப்பதும் அப்பட்டமான கேலிக்கூத்தாகும். இலங்கையில் இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டபோது அதற்குத் துணை நின்றும் அதைத் தடுக்க எதுவும் செய்யாமலும் வேடிக்கைப்பார்த்த மன்மோகன்சிங்கும், கருணாநிதியும் இப்போது கரிசனம் காட்டுவதை தமிழர்கள் ஒருபோதும் நம்பமாட்டார்கள். தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக இத்தகைய அறிக்கை நாடகங்களை நடத்துவதை கைவிட்டு அந்த மக்களைக் காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதமரையும், முதலமைச்சரையும் வற்புறுத்துகிறேன். |