சிங்களருக்கு வெண்சாமரம் வீசும் கருணாநிதி - பழ.நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 02 ஜூலை 2009 17:01
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
‘ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்க வேண்டுமேயானால் சிங்கள அரசின் மூலமாகதான் அதைச் செய்ய முடியும். எனவே நம்முடையப் பேச்சால், நம்முடைய நடவடிக்கையால் சிங்களவர்களுடைய கோபத்தை அதிகரிக்கும் வகையில் எதுவும் செய்துவிடக் கூடாது.’ என முதல்வர் கருணாநிதி தமிழகச் சட்டமன்றத்தில் கூறியிருக்கிறார்.
ஏறத்தாழ ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்த இராஜபக்சேக்கும் அவருடைய கூட்டத்திற்கும் ஆத்திரமூட்டும் எத்தகைய நடவடிக்கையிலும் ஈடுபடாமல் நடந்து கொள்ள வேண்டுமென தமிழர்களுக்கு கருணாநிதி அறிவுரை வழங்கியிருக்கிறார். அதாவது உதைக்கிற காலுக்கு முத்தமிட வேண்டுமென்று வற்புறுத்தியிருக்கிறார்.
கன்னடர்களுக்கு கோபமூட்டாமல் காவிரிப் பிரச்னையிலும், மலையாளிகளுக்கு கோபமூட்டாமல் முல்லைப் பெரியாறு பிரச்னையிலும் நீக்குப் போக்குடன் கருணாநிதி நடந்து கொண்டதினால்தான் அப்பிரச்னைகளில் தமிழகம் மிகப் பெரிய இழப்புகளுக்கு ஆளாக நேரிட்டது.
ஈழத் தமிழர் பிரச்னையிலும் காங்கிரசுக் கட்சிக்குக் கோபமூட்டி அதன் விளைவாக தேர்தல் உறவு பாதிக்கப்பட்டு விடக் கூடாதே என்பதற்காக இவர் கையாண்ட அணுகுமுறையின் விளைவாக ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
அது மட்டுமல்ல, ‘தமிழீழத் தனி நாடு இனி சாத்தியமானது அல்ல. சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு வேண்டி சிங்களரிடம் மண்டியிட வேண்டு’மென்றும் ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
‘கொள்கையைக் கைவிடுவதற்கும் ஒரு துணிச்சல் வேண்டும். திராவிட நாடு கொள்கையை தி.மு..க கைவிட்டதற்கு காரணம் கட்சியை ஒழிப்பதற்கு சட்டம் வந்த போது திராவிட நாடா அல்லது கட்சியா என்ற கேள்வி எழுந்தது. எனவே முதலில் கட்சிதான் வேண்டுமென்று முடிவெடுத்ததாக’வும் முற்றிலும் உண்மைக்கு மாறான தகவலை கூறியிருக்கிறார்.
பிரிவினைக் கேட்கும் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற சட்டம் கொண்டு வரப் படவில்லை. பிரிவினைக் கேட்கும் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்றுதான் சட்டம் கொண்டு வரப்பட்டது. தேர்தலில் போட்டியிட்டு பதவி சுகம் அனுபவிப்பதற்கு இச்சட்டம் தடையாக இருக்கும் என்று கருதியதால்தான் திராவிட நாடு கோரிக்கை குழி தோண்டி புதைக்கப்பட்டது. வரலாற்றுப் பூர்வமான இந்த உண்மையைத் திரித்து பேசுகிறார் கருணாநிதி.
30 ஆண்டு காலம் அற வழியில் சம உரிமைக் கேட்டு ஈழத் தமிழர்கள் போராடினார்கள். எதுவுமே கிடைக்காத காலக்கட்டத்தில் ஆயுதம் தாங்கியப் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டத்தில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார்கள். 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சொந்த மண்ணில் வாழ வழியில்லாமல் அயல்நாடுகளில் அகதிகளாக அடைக்கலம் புகுந்தார்கள். தமிழீழப் பகுதி முழுவதிலும் பாதிக்கப்படாத தமிழர் குடும்பமே இல்லை. இவ்வளவு தியாகங்களை ஈழத் தமிழர்கள் செய்த பிறகு அந்தப் போராட்டத்தைக் கொச்சைப் படுத்தவும் பின்னோக்கித் தள்ளவும் கருணாநிதி முயற்சி செய்வதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
உலகத்தின் பல நாடுகள் இராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களை மிகக் கடுமையாகக் கண்டனம் செய்யும் கட்டத்தில் அவருக்கு வெண்சாமரம் வீசும் வேளையில் தமிழக முதலமைச்சர் ஈடுபட்டிருப்பது வெட்கக் கேடானதாகும். இதன் மூலம் உலக நாடுகள் நடுவில் ஈழத் தமிழர் போராட்டம் குறித்து ஒரு தவறானக் கண்ணோட்டத்தை ஏற்படுத்த அவர் செய்யும் முயற்சி வெற்றி பெறப் போவதில்ல. ஈழத் தமிழரின் மன உறுதி ஒரு போதும் தளரப் போவதில்லை. அவர்களுக்கு ஆதரவாக உலகத் தமிழர்களின் போரட்டங்களும் ஓயப் போவதில்லை.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.