ஈழத் தமிழர் வாழ்வுரிமைக்கான உலகத்தமிழர் பிரகடனம் வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளத் திரளுவீர்! - தலைவர்கள் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 ஆகஸ்ட் 2009 17:41
இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், பா.ம.க. நிறுவனர் மரு. இராமதாசு, ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ, இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் ஆகியோர் விடுத்துள்ள கூட்டறிக்கை:
இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டும், 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டு உணவு, மருந்து, குடிநீர், சுகாதார வசதிகள் இல்லாமல் பெரும் துன்பத்திற்கு ஆளாகி தினமும் நூற்றுக்கணக்கில் மடிந்துக் கொண்டிருக்கிறார்கள். போராளிகள் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டவர்களின் விவரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. அவர்கள் கதி என்னாயிற்று என்பதும் தெரியவில்லை. உலகம் கண்டிராத மாபெரும் மனித அவலம் இலங்கை மண்ணில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
சிங்கள இனவெறிப் படுகொலையில் இருந்து தப்பிய தமிழர்களும் புலம் பெயர்ந்த தமிழர்களும், உலகத் தமிழர்களும் இணைந்து நின்று அய்.நா. அமைப்பினையும் உலக நாடுகளையும் சர்வதேச சமுதாயத்தையும் வற்புறுத்திச் செயல்பட வைக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ் நாட்டில் உள்ள ஆறரைக்கோடி தமிழ் மக்களுக்கு பெரும் பொறுப்பும் கடமையும் உண்டு என்பதை உணர்ந்து செயல்பட முன்வருமாறு வேண்டிக்கொள்கிறோம்.
ஈழத் தமிழர்கள் தங்களின் தாயகத்தை விடுவிக்கும் போராட்டத்தில் தங்கள் வலிமைக்கு மேலான அளப்பரிய தியாகங்களைச் செய்திருக்கிறார்கள். உலகில் எந்த ஒரு தேசிய இனமும் சந்தித்திராத வெங்கொடுமைகளுக்கும், பேரிழப்புகளுக்கும், ஆளாகியிருக்கிறார்கள். இந்த இழிநிலையை நாம் மாற்றியமைக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் எண்ணற்ற தியாகங்களைச் செய்வதற்கு உலகத் தமிழர்களாகிய நாம் அணியமாக வேண்டும். இதன் மூலம் மட்டுமே ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்த முடியும் என்பதை நெஞ்சார உணர்ந்து உலகத் தமிழர் பிரகடனத்தை சர்வதேச சமுதாயத்தின் முன் வெளியிடுவதற்காகவே சென்னை, அமைந்தகரை, புல்லா அவென்யு சாலையில் வரும் 20-8-2009, வியாழன் அன்று மாலை 6 மணிக்கு நாம் கூடுகிறோம்.
உலகத் தமிழர்களாகிய நாம் ஒன்றுபட்டு ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் வேளையில் உலகெங்கிலும் உள்ள ஜனநாயக சக்திகள், சமத்துவ சிந்தனையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் நம்முடன் இணைந்து குரல் கொடுக்க முன் வருமாறும், உலகத் தமிழர்கள் அனைவரும் அவர்கள் வாழும் நாடுகளில் உள்ள மக்களையும், அரசுகளையும் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு ஆதரவாகத் திருப்புவதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுமாறும் அனைவரையும் வேண்டிக்கொள்வதற்காக சென்னையில் தமிழர்கள் பெருந்திரளாகக் கூடவேண்டும்.
தமிழர் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மகத்தான ஒரு கடமையை மேற்கொள்வதற்காகவே நாம் கூடுகிறோம். இக்கூட்டத்தில் உலகறிய நாம் செய்யவிருக்கிற பிரகடனம். ஈழத்தமிழர்களுக்கு வாழ்வளிக்கப்போகும் பிரகடனம் மட்டுமல்ல, உலகத்தமிழர் அனைவருக்கும் விடிவைக் கொண்டு வருவதற்கான வழிகாட்டும் பிரகடனமுமாகும் என்பதை உணர்ந்து தமிழர்கள் கட்சி, சாதி, மத வேறுபாடுகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு சென்னையில் ஒன்றுகூடுமாறு அனைவரையும் அன்புரிமையுடன் வேண்டிக் கொள்கிறோம்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.