உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் அரசுச் தலைமைச் செயலாளர் - பழ.நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 18 ஆகஸ்ட் 2009 17:43
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
‘‘தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது தண்டனைக்குரியக் குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பத்திரிகை விளம்பரம் வாயிலாக எச்சரித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக் குழு ஆகியவை தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவது குற்றமல்ல என ஏற்கெனவே கடந்தக் காலத்தில், அதாவது, கடந்த 2004-ஆம் ஆண்டில் மிக தெளிவாகவும் விளக்கமாகவும் தீர்ப்புகள் வழங்கியுள்ளன. அந்த தீர்ப்புகளின் அடிப்படையில்தான் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதாக பொடா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நானும் வைகோவும் உட்பட பலர் விடுதலை செய்யப்பட்டோம். நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றங்கள் அளித்த இந்த தீர்ப்புகளைக் கொஞ்சமும் மதியாத வகையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் விளம்பரம் வெளியிட்டிருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மற்றும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் ஆகியவை தடை செய்யப்பட்ட இயக்கங்களின் தலைவர்களின் படங்கள் கொடி மற்றும் இலச்சினைகளை பிரசுரிப்பது சட்டப்படி தண்டனைக்குரியக் குற்றங்களாகும் என்றும் மிரட்டியிருக்கிறார். ஊடகங்களின் சுதந்திரத்தை பறித்து மிரட்டிப் பணிய வைப்பதற்கான இந்த முயற்சியை கண்டிக்கிறேன்.
ஏற்கெனவே 2009-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டில் நாங்கள் நடத்தவிருந்த முழு அடைப்புப் போராட்டம் சட்ட விரோதமானது என இதே தலைமைச் செயலாளர் எங்களை எச்சரித்து கடிதம் அனுப்பினார்.
ஆனால் முழு கடையடைப்பு நடத்துவது சட்ட விரோதமானது அல்ல என்று 3-2-09 அன்று உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பைக் கூட மதியாத தன்மையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் நடந்துக் கொண்டது கடும் கண்டனத்திற்கு உள்ளானது.
நீதிமன்றத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையிலும் அரசியல் கட்சிகளையும் ஊடகங்களையும் மிரட்டுவதற்கும் தலைமைச் செயலாளரை முதலமைச்சர் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
ஈழத் தமிழர் பிரச்னை சுமூகமாக தீர்ந்துவிட்டது என்று சில நாட்களுக்கு முன்னால் கூறிய முதலமைச்சர் இப்போது முகாம்களில் உள்ள ஈழத் தமிழர்களை விடுவிக்க மத்திய அரசு தலையிட வேண்டுமென்று கடிதம் எழுதுகிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணாகச் செயல்படுவது அவரது வழக்கமாகி விட்டது.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை சட்ட விரோதமான மிரட்டல்கள் மூலம் ஒடுக்கிவிட முயல்வது ஒருபோதும் வெற்றி பெறாது.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.