முகாம்களில் அடைபட்டுள்ள மக்களை விடுவிக்க உண்மையான முயற்சிகள் எடுக்காத கருணாநிதிக்கு பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2009 17:45
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இலங்கையில் ஈழத்தமிழர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருவதையும் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைச் செய்யப்படுவதையும் தடுத்து நிறுத்த உருப்படியாக எதுவும் செய்யாமல் கண்துடைப்பு முயற்சிகளில் தமிழக முதலமைச்சர் கருணாநிதியும் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இலங்கையில் போர் உச்சக்கட்டம் அடைந்த நிலையில் உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட்டு அப்பாவி மக்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தமிழக மக்கள் கொதித்தெழுந்து போராடினார்கள். அப்போதும் போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை வற்புறுத்தியிருப்பதாக இந்தியப் பிரதமர் கூறினார். தமிழக முதலமைச்சரும் அதை வழிமொழிந்தார். ஆனால் இறுதிவரை போர் நிறுத்தம் செய்யப்படவேயில்லை. ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப்பதைக்கப் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்திய அரசின் கபட நாடகம் இதன்மூலம் அம்பலமாயிற்று.
இப்போது முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டுள்ள மூன்று இலட்சம் தமிழர்களை விடுவிக்கவேண்டுமென தமிழக மக்கள் போராடி வருகிறார்கள். ஆனால் முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதுவதும் பிரதமர் சார்பில் அதிகாரிகள் இலங்கை அதிபருக்குக் கடிதம் எழுதுவதுமான நாடகம் தொடருகிறதே தவிர அம்மக்களுக்கு விடிவு பிறக்கவில்லை. அய்.நா.வின் சார்புச் செயலாளர் லின் பாஸ்கோ கடந்த மாதம் நேரில் சென்று முகாம்களைப் பார்வையிட்டு வெளியிட்டுள்ள அறிக்கை இந்த உண்மையை அம்பலப்படுத்தியுள்ளது. ஏற்கனவே முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்ட சில ஆயிரம் தமிழர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டு வெவ்வேறு இடங்களில் மீண்டும் சிறைவைக்கப்பட்டுள்ளனர் என்ற திடுக்கிடும் செய்தியும் அம்பலமாகியுள்ளது.
ஏற்கனவே இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களைக் கண்டிக்கும் வகையில் அய்.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா உள்பட மேற்கு நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தபோது, இந்தியா முன்னின்று அந்தத் தீர்மானத்தைத் தோற்கடித்து இராசபக்சே அரசைக் காப்பாற்றியது. அதற்கு கழுவாய்த் தேடும் வகையில் இந்திய அரசு இப்போது அய்.நா. பேரவையில் முகாமில் உள்ள அனைத்து தமிழர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் தவறினால் இலங்கைக்கு எதிரான பொருளாதார புறக்கணிப்பு நடவடிக்கையை உலக நாடுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தும் தீர்மானம் ஒன்றினைக் கொண்டுவந்து நிறைவேற்றவேண்டும் அப்போதுதான் இந்திய அரசின் மீது தமிழர்களுக்கு நம்பிக்கை பிறக்கும்.
உயிர் வாதைப்படும் மூன்று இலட்சம் தமிழர்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் தன்னுடைய உயிருக்கு ஆபத்து என ஓலமிடும் ஒருவரைத் தமிழகம் முதலமைச்சராகப் பெற்றிருப்பதைக் குறித்து உலகத்தமிழர்கள் வேதனை அடைந்துள்ளனர். அவர்களின் வேதனையை முதலமைச்சருக்குச் சுட்டிக்காட்டியதற்காக என்மீது பாய்கிறார். குண்டர் சட்டத்தைச் காட்டி மிரட்டுகிறார். தமிழர்களின் வெறுப்பிற்கும் கோபத்திற்கும் ஆளாகும் போதெல்லாம் தனது உயிருக்கு ஆபத்து என்ற கூக்குரலை எழுப்பி பிரச்சினையைத் திசை திருப்ப முயல்வது முதலமைச்சர் கருணாநிதிக்கு மட்டுமே ஆகிவந்த கலையாகும். இது போன்ற நாடகங்களை எல்லாம் நிறுத்திவிட்டு முகாம்களில் உள்ள மக்களை மீட்பதற்கு உரிய உண்மையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவரை வேண்டிக்கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.