வரலாறு தெரியாமல் பேசவேண்டாம் - ஜெயலலிதாவுக்கு பழ.நெடுமாறன் கண்டனம் |
|
|
|
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2009 17:47 |
ஈழத்தமிழர் மீதான கொடுமையை இந்திய அரசு தட்டிக் கேட்கவேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையை வரவேற்கிறேன். ஆனால் அதில் தேவையற்ற வகையில் விடுதலைப் புலிகளைக் குறை கூறியுள்ளார். "தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடுவது என்ற பாதையிலிருந்து விலகி தனது அரசியல் எதிரிகளை அழித்து தனக்கு ஒத்துவராதவர்களைக் கொலை செய்து வருகிற தீவிரவாத இயக்கமாக தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் என்றைக்கு மாறியதோ அன்றிலிருந்து அந்த இயக்கத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறேன்' என்று கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது சிங்கள அரசும் அந்த அரசின் கைக்கூலிகளும் தி.மு.க. தலைவர் கருணாநிதியும் செய்துவரும் பொய்ப்பிரச்சாரத்தையே ஜெயலலிதாவும் கூறுவது அவர் எந்த அளவுக்கு அந்த இயக்கத்தைப் பற்றி அறியாமல் இருக்கிறார் என்பதைப் புலப்படுத்துகிறது. மறைந்த அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆர். அவர்கள் பிரபாகரன் அவர்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்த அளவுக்கு உதவி செய்தார் என்பதை நாடறியும். ஜெயலலிதாவின் குற்றச்சாட்டில் உண்மை இருக்குமானால் எம்.ஜி.ஆர். ஒரு போதும் உதவியிருக்கமாட்டார் என்பதை உணரவேண்டும். ஈழத் தமிழர்கள் உட்பட தமிழர்களின் நாடித்துடிப்பை நன்கறிந்தவர் எம்.ஜி.ஆர். அவரால் இறுதிவரை ஆதரிக்கப்பட்ட ஒரு இயக்கத்தின் மீது அவதூறு கூறுவது அவருக்கு இழைக்கப்படும் மன்னிக்கமுடியாத தவறாகும். ஈழ மக்களின் ஒரே பாதுகாவலனாகவும் அவர்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்ற தேசிய விடுதலை இயக்கமாகவும் புலிகள் இயக்கம் மட்டுமே திகழ்ந்து வருகிறது. அதனால்தான் எவ்வளவு கொடுமைகளுக்கு ஆளானபோதிலும் ஈழத் தமிழர்கள் அந்த இயக்கத்தின் பின்னால் நிற்கிறார்கள். ஜெயலலிதா கூறுவதைப்போல அந்த இயக்கம் இருக்குமானால் ஈழத்தமிழர்களின் ஒட்டுமொத்த ஆதரவு அந்த இயக்கத்திற்கு கிடைத்திருக்காது. வரலாறு தெரியாமலும் சிங்கள அரசின் பொய்ப்பிரச்சாரத்தையே எதிரொலிப்பதும் மிகவும் கண்டனத்துக்குரியது. விடுதலைப்புலிகளின் இயக்கம் ஈழமக்களின் தேசிய விடுதலை இயக்கமாகும். அதை கொச்சைப்படுத்த முயல்பவர் யாராக இருந்தாலும் அவர்களை ஈழத் தமிழர்கள் மன்னிக்கமாட்டார்கள். |