ஈழ ஆதரவு கூட்டத்துக்குத் தடை - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2009 17:48
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
அமெரிக்க மனித உரிமை போராளியான மருத்துவர் எலின் ஷான்டர் அவர்களை அழைத்து தமிழகத்தில் சில கூட்டங்களில் பேசவைப்பதற்கு திட்டமிட்டோம். ஈழத் தமிழர் பிரச்சினையில் தீவிரமான ஈடுபாடு காட்டி வரும் அவர் பேசினால்
மக்களிடையே நல்ல எழுச்சி ஏற்படும் என நம்பினோம். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்கு அளிக்கப்பட்டிருந்த விசாவை இந்திய அரசு ரத்து செய்துவிட்டது. ஆனாலும் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அவரது பேச்சை தமிழக மக்களுக்கு போட்டுக் காட்ட முடிவு செய்தோம். அதற்கிணங்க மதுரை, கோவை, பெங்களூர், புதுடெல்லி ஆகிய நகரங்களில் சிறப்பாக கூட்டங்கள் நடைப்பெற்றன. இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத் தலைவர்கள் இக்கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார்கள்.
அத்தனை கூட்டங்களும் எத்தகைய வேண்டாத நிகழ்ச்சிகள் இல்லாமல் சிறப்பாக நடைபெற்றன. செப்டம்பர் 29ந் தேதி சென்னையில் இந்தக் கூட்டம் மருத்துவர் இராமதாஸ் தலைமையில் நடைபெற இருந்தது. இக்கூட்டத்தில் பழ. நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், ம. நடராசன் ஆகியோர் பேச இருந்தனர். அதற்கு அனுமதி வழங்க காவல்துறை மறுத்துவிட்டது. உயர்நீதிமன்றம் சென்று முறையிட்டோம். உயர்நீதிமன்ற ஆணையின்படி காவல்துறை அனுமதி வழங்கிற்று. வேண்டா வெறுப்புடன் அனுமதி வழங்கிய காவல்துறை கூட்டம் நடைபெற இருந்த மண்டபத்தின் உரிமையாளரை மிரட்டி மண்டபம் கொடுக்க விடாதபடி செய்துவிட்டது. எனவே மீண்டும் உயர்நீதிமன்றத்தில் காவல் துறையின் தகாதப் போக்குக் குறித்து முறையிட்டுள்ளோம். உயர்நீதிமன்றத்தின் அனுமதியோடு இந்தக் கூட்டம் விரைவில் நடத்தப்படும் எனவே ௨௬ல் நடைபெற இருந்தக் கூட்டம் தள்ளிவைக்கப்படுகிறது.
தனது ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு காவல்துறையை பயன்படுத்தி எதிர்க்குரலை ஒடுக்க முயலும் முதலமைச்சர் கருணாநிதியின் ஏதேச்சதிகாரப் போக்கை வன்மையாக கண்டிக்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.