கேரளத்தின் காலம் கடத்தும் தந்திரத்திற்கு தமிழகம் சம்மதித்தது ஏன்? |
|
|
|
புதன்கிழமை, 11 நவம்பர் 2009 18:20 |
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் கண்டனம். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் அரசியல் சட்டம் தொடர்பான பல்வேறு சிக்கல்கள் அடங்கி இருப்பதால் இதுகுறித்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு ஆயம் விசாரிக்கும் என உச்சநீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு அறிவித்துள்ளது.
தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் தொடக்கத்தில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோதிலும் பிற்பகலில் கேரள வழக்கறிஞருடன் இணைந்து இதை ஏற்பதாக எழுத்துப்பூர்வமான சம்மதம் தெரிவித்ததின் பேரில் உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பினை அளித்துள்ளது என்ற செய்தி முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகளைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2006ஆம் ஆண்டு முல்லைப் பெரியாரின் நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் கூடிய நீதிபதிகள் ஆயம் தீர்ப்பளித்தது. ஆனால் இத்தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்துவிட்ட கேரள அரசு இத்தீர்ப்பை முடக்கும் வகையில் புதிய சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இந்தச் சட்டம் செல்லாது என தமிழக அரசு தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் கடந்த மூன்று ஆண்டு காலத்திற்கு மேலாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பளிக்க வேண்டிய காலகட்டத்தில் இப்பிரச்சினையில் அரசியல் சட்டம் தொடர்பான சிக்கல்கள் இருப்பதால் அரசியல் சட்ட ஆயம்தான் இதை விசாரிக்க வேண்டுமென கேரள வழக்கறிஞர் வாதாடி அதை முதலில் எதிர்த்த தமிழக வழக்கறிஞர் பின்னர் ஏற்றுக்கொண்டதன் விளைவாக வேண்டாத விளைவுகள் ஏற்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டு காலத்திற்கு மேலாக ஒவ்வொரு கட்டத்திலும் காலம் கடத்தும் வகையில் கேரளம் செயல்பட்டு வருகிறது. இப்போது உச்சநீதிமன்றம் அளித்துள்ளத் தீர்ப்பின் விளைவாக இப்பிரச்சினை மேலும் சில ஆண்டு காலத்திற்கு இழுத்தடிக்கப்படும். இதன் விளைவாக தென் மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் ஆண்டு தோறும் 60 கோடி ரூபாய் இழப்புக்கு ஆளாவார்கள். மின்உற்பத்தியில் இழப்பு ஆண்டுக்கு சுமார் 80 கோடி ரூபாய் ஆகும். ஏற்கனவே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் தலைமையில் கூடிய நீதிபதிகளின் ஆயம் வழங்கிய தீர்ப்பை இப்போது மற்றொரு அரசியல் சட்ட ஆயம் விசாரிக்கவோ மாற்றவோ அதிகாரம் உண்டா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு தமிழக அரசு எப்படி சம்மதம் தெரிவித்தது? என்பதற்கு முதலமைச்சர் கருணாநிதி பதில் கூறவேண்டும்.
|