கேரளத்தின் காலங்கடத்தும் தந்திரம் வெற்றிபெற்றுவிட்டது |
|
|
|
வியாழக்கிழமை, 18 பெப்ரவரி 2010 18:25 |
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையில் மத்திய அரசையும் உச்சநீதிமன்றத்தையும் தனக்கு ஆதரவாக திருப்புவதிலும், காலங்கடத்தும் தந்திரத்திலும் மீண்டும் கேரளம் வெற்றிபெற்றுவிட்டது. 30 ஆண்டு காலத்திற்கு மேலாக மத்திய அரசு உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுக்கு தமிழக விவசாயிகள் தரப்பின் நியாயத்தினை எடுத்துக்கூறி நீதி கிடைக்கச் செய்வதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்துவிட்டது என்பதையே உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது.
1979ஆம் ஆண்டிலிருந்து 30 ஆண்டு காலத்திற்கு மேலாக பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு கேரளம் பலவகையிலும் முட்டுக்கட்டை இடும் முயற்சியில் ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிபெற்றே வந்திருக்கிறது. பத்தாண்டு காலத்திற்கு மேலாக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த 27-02-2006 அன்று அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என இறுதியாகத் தீர்ப்புக் கூறிவிட்டது. ஆனால் இந்தத் தீர்ப்பை ஏற்க கேரள அரசு மறுத்ததோடு மட்டுமல்லாமல் கேரள நீர்ப்பாசனப் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து இத்தீர்ப்பை செல்லாததாக்க முயற்சி செய்தது. கேரளத்தின் சட்டத் திருத்தம் அரசியல் சட்டப்படி செல்லாது என தமிழகம் தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் 3 ஆண்டு காலமாக விசாரித்து தீர்ப்புக் கூறப்போகும் கட்டத்தில் வேண்டுமென்றே இது அரசியல் சட்டப் பிரச்சினை எனவே அரசியல் சட்ட ஆயம் தான் இதை விசாரிக்க வேண்டும் என கேரளம் பிரச்சினையைத் திசைத் திருப்பியது. இதை ஓராண்டு காலமாக விசாரித்த உச்ச நீதிமன்றம் கேரளத்தின் காலங்கடத்தும் தந்திரத்திற்கு இடமளிக்கும் வகையில் முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு மற்றும் தமிழக விவசாயிகளுக்கு தேவைப்படும் நீரின் அளவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆராய ஐந்து பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை அமைக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது. ஏற்கனவே 1979ஆம் ஆண்டு மத்திய நீர்வள ஆணையத்தின் தலைவர் கே.சி.தாமஸ் தலைமையில் ஒரு குழுவும் 2000ஆம் ஆண்டில் மத்திய அரசு நியமித்த பி.கே. மிட்டல் தலைமையிலான வல்லுநர் குழுவும் ஆய்வு செய்து அணை மிக்க பலமாக இருப்பதை உறுதி செய்தன. அது மட்டுமல்ல கேரளம் எழுப்பிய 12 பிரச்சினைகளையும் ஆதாரமற்றவை என நிராகரித்தன. மத்திய மண்விசை இயல் ஆராய்ச்சி நிலையத்தைச் சேர்ந்த நிபுணர்கள் ஆய்வு செய்து அணை பலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்தார்கள். இக்குழுக்கள் அனைத்தும் அளித்த அறிவுரைகளை ஏற்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையில் கூடிய நீதிபதிகளின் ஆயம் அணையின் நீர்மட்டத்தை 142 அடி உயர்த்தலாம் என திட்டவட்டமான தீர்ப்பை அளித்தாகிய பிறகு மீண்டும் அணையின் பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை ஆராய்வதற்கு ஒரு குழுவை உச்சநீதிமன்றம் அமைப்பது தேவையற்றதாகும். இது நீண்ட காலமாக தமிழகத்திற்கு கேரளம் இழைத்துவரும் அநீதியை நீக்குவதற்குப் பதில் மேலும் அநீதியை இழைப்பதாகும். மத்திய அரசிலும், உச்சநீதிமன்றத்திலும் கேரளத்தின் செல்வாக்குத் தொடர்ந்து நீடிப்பதையே இத்தீர்ப்பு எடுத்துக்காட்டுகிறது. மத்திய அரசில் தமிழகத்தைச் சேர்ந்த 9 அமைச்சர்கள் இருந்த போதிலும் அவர்கள் தமிழகத்தின் நியாயத்தை பிரதமருக்கோ அல்லது மற்றவர்களுக்கோ எடுத்துக்கூற அடியோடு தவறிவிட்டார்கள். தமிழக அரசும் தனது தரப்பினை எடுத்துக்கூறவேண்டிய அளவுக்கு எடுத்துக்கூற முற்றிலும் தவறிவிட்டது. இவர்கள் செய்த தவறின் விளைவை தென் மாவட்ட விவசாயிகள் அனுபவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கதாகும். இனி விவசாயிகள் ஒன்றுபட்டு பெரும் போராட்டம் நடத்தத் தயாராவதைத் தவிர வேறுவழியில்லை. முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழு விரைவில் கூடி இது குறித்து முடிவெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். |