தமிழகத்தில் உற்பத்தியாகும் மின்சாரம் தமிழகத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 07 ஏப்ரல் 2010 18:39
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
தமிழ்நாட்டில் மின்பற்றாக்குறையின் விளைவாக தொழில், விவசாயம் ஆகியவை மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பல தொழிற்சாலைகள் மூடப்பட்டும், வேலை நேரம் குறைக்கப்பட்டும், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கோடை விவசாயம் மேற்கொண்டுள்ள விவசாயிகள் பெருமளவு இழப்புக்கு ஆளாகியுள்ளனர்.
நாள்தோறும் இரண்டு மணி நேரம்கூட விவசாயிகளுக்கு மின்சாரம் கிடைக்காததால் பயிர்கள் காய்ந்துவிட்டன. பொதுமக்களும் மின்பற்றாக்குறையின் விளைவாக பல துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் 11 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 3,500 மெகாவாட் பற்றாக்குறை உள்ளது. ஆனால் நெய்வேலி அனல் மின்நிலையங்களிலிருந்தும் கல்பாக்கம் அணு மின்நிலையத்திலிருந்தும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் தமிழகத்திற்கு 20% மட்டுமே அளிக்கப்படுகிறது. மற்றவை வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
மின்பற்றாக்குறை தீரும்வரை தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்படவேண்டும். வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுவதை நிறுத்தவேண்டும். இதில் கர்நாடக அரசு வழிகாட்டியுள்ளது. கர்நாடகத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை வெளிமாநிலங்களுக்கு வழங்குவதை கர்நாடக அரசு தடைசெய்து ஆணைப்பிறப்பித்துள்ளது. அதைப்போல தமிழக அரசும் உடனடியாக தடை ஆணையை பிறப்பிக்குமாறு வற்புறுத்துகிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.