இராசபக்சே கையால் விருது பெறுவதா? - இந்தியத் திரையுலகிற்கு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் |
|
|
|
சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2010 18:45 |
இலங்கையில் சூன் மாதம் சர்வதேச இந்திய திரைப்பட விருது வழங்கும் விழா மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில் விளம்பரத்தூதராக நடிகர் அமிதாப் பச்சன் இருந்து வருகிறார். இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவை இலங்கைக் குடியரசுத் தலைவர் இராசபக்சே தலைமையில் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. இந்தியப் படங்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்படும் படங்களுக்குரிய விருதுகளை இராசபக்சே வழங்குவார்.
இலங்கையில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்களை கொன்று குவித்து மூன்று இலட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்களை முள்வேலி முகாம்களில் அடைத்துக் கொடுமை செய்தும் இராசபக்சே நடத்திய வெறித்தாண்டவத்தின் சாயல் இன்னும் மறையவில்லை. தமிழர்கள் சிந்திய இரத்தம் இன்னும் காயவில்லை. இந்தச் சூழ்நிலையில் உலக நாடுகள் எல்லாம் போர்க்குற்றவாளியாக இராசபக்சேயை விசாரிக்க வேண்டுமென குரல் எழுப்பி வரும் வேளையில் இந்தியாவின் துணைகொண்டு தப்புவதற்கு இராசபக்சே நடத்தும் நாடகத்திற்கு இந்தியத் திரையுலகம் துணைபோவது மிகமிக இழிவானது. அதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழரின் இரத்தம் தோய்ந்த கைகளினால் இராசபக்சே வழங்கும் விருதுகளை இந்தியத்திரையுலகைச் சேர்ந்த கலைஞர்கள் பெறுவது மன்னிக்க முடியாத கொடும் செயலாகும். நல்லவேளையாக ரஜினி, கமல், விஜய், அஜீத் போன்ற நடிகர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள முடியாது என மறுப்புத் தெரிவித்திருப்பதை பாராட்டுகிறேன். தமிழ்த் திரையுலகத்தைச் சேர்ந்த மற்ற கலைஞர்களும் இவ்விழாவில் பங்கேற்க மறுக்க வேண்டும். அதைப்போல இந்தியத் திரையுலகைச் சேர்ந்த அனைவருமே இந்த விழாவைப் புறக்கணிக்க வேண்டும். ஈழத்தமிழர்களை ஒழித்துக்கட்ட சிங்கள அரசுக்கு இந்திய அரசு இராணுவ ரீதியிலான உதவிகள் வழங்கிய செயல் இன்னமும் தமிழர்கள் நெஞ்சில் ஆறாத இரணமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தொழில்தொடங்க இலங்கை வருமாறு இராசபக்சே விடுத்த அழைப்பை ஏற்று இந்தியத் தொழிலதிபர்கள் அங்கு செல்வதும், இந்திய இரயில்வேத் துறையினர் இலங்கையில் இரயில்வேயை சீரமைத்துத் தந்துகொண்டிருப்பதும், இலங்கையின் மின்சார உற்பத்தியைப் பெருக்குவதற்குரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டிருப்பதும், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளே ஆகும். இப்போது இந்தியத் திரைப்படத் விழாவை இலங்கையில் நடத்த திட்டமிட்டிருப்பது தமிழர்களை தொடர்ந்து அவமதிப்பதோடு வெந்த புண்ணில் வேல் செருகும் செயலாகும். இதற்கு எதிராகத் தமிழ்த் திரையுலகம் கொந்தளித்து எழவேண்டும் என்று நான் வேண்டிக்கொள்கிறேன். |