முள்ளிவாய்க்கால் படுகொலை முதலாண்டு நினைவு நாள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 13 மே 2010 18:48
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இலங்கையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்களப் படையால் பதறபதறப் படுகொலை செய்யப்பட்ட ஒரு இலட்சத்திற்கு மேலான ஈழத்தமிழர்கள் மற்றும் போராளிகள் ஆகியோரின் முதலாண்டு நினைவு நாள் 17-05-10 அன்று வர இருக்கிறது. நீண்ட நெடிய தமிழர் வரலாற்றில் இதுபோன்ற மிகக்கொடுமையான நிகழ்ச்சி நடந்ததேயில்லை. இந்த நாளை நினைவில் நிறுத்தி கொல்லப்பட்ட நமது மக்களுக்கு வீரவணக்கம் செலுத்தவேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனுக்கும் உண்டு.
மே 17 முதல் மே 31 வரை உள்ள 15 நாட்களில் உலகெங்கும் உள்ள தமிழர்கள், குறிப்பாக தமிழ்நாட்டுத் தமிழர்கள் வீரவணக்கப் பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றை நடத்தி முள்ளிவாய்க்கால் படுகொலை ஓராண்டு நினைவு நாளைக் கடைப்பிடிக்கும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன்.
இக்கூட்டங்களில் கீழ்க்கண்டக் கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டுகிறேன்.
1. இலங்கை மீதான நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தின் டப்ளின் அறிக்கையை ஏற்று அதன்மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அய்.நா. பேரவையை வலியுறுத்த வேண்டும்.
2. போர்க் குறித்த ஜெனீவா உடன்பாடுகளை அப்பட்டமாக மீறியும் போரின் இறுதி ஐந்து மாதங்களான ஜனவரி முதல் மே 2009 வரையிலான காலக்கட்டத்தில் கொடூரமான போர்க் குற்றங்களையும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களையும் புரிந்த இலங்கை அதிபர் இராசபக்சே இராணுவத்தளபதியாக இருந்த சரத்பொன்சேகா மற்றும் இவர்களுக்குத் துணையாக நின்றவர்கள் ஆகியோரைப் போர்க்குற்றவாளிகளாக கருதி சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டுமென வலியுறுத்த வேண்டும்.
3. போர் முடிந்த பிறகும் ஐந்து மாதங்களுக்கு மேலாக முள்வேலி முகாம்களில் அடைபட்டுக் கிடந்த சுமார் மூன்று இலட்சம் மக்களில் ஒரு பகுதியினரை மட்டும் உலக நாடுகளின் கண்டனத்திற்கிணங்க விடுவிப்பதாக சிங்கள அரசு அறிவித்தது. ஆனால் முள்வேலி முகாம்களில் இன்னமும் அடைப்பட்டுக் கிடக்கும் மக்களும், தற்காலிகமாக வெளியேற்றப்பட்டவர்களும் தங்களின் சொந்த ஊர்களில் குடியேறமுடியாதபடி மீண்டும் அகதி வாழ்விலும் இடப்பெயர்வு வாழ்விலும் தவிப்பதிலிருந்து மீட்டுக் காக்க வேண்டிய கடமை அய்.நா. பேரவைக்கு உண்டு. உடனடியாகத் தலையிட்டு இந்த மக்களைக் காக்கத் தவறினால் பேரழிவு ஏற்படும் என எச்சரிக்க வேண்டும்.
4. போராளிகள் மற்றும் அரசியல் கைதிகள் என்ற பெயரால் தனி முகாம்களில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு உள்ளாகிவரும் பன்னிரண்டாயிரம் பேரின் உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமை அய்.நா. பேரவைக்கு உண்டு. அதிலும் குறிப்பாக முகாம்களில் அடைக்கப்பட்டுக் கிடக்கும் பெண்கள் சந்திக்க நேர்ந்துள்ள பாலியல் கொடுமைகளிலிருந்து அவர்களை விடுவிப்பது சர்வதேச சமூகத்தின் நீங்காத கடமையாகும். எவ்வளவு விரைவாக இதில் செயல்பட்டு அவர்களை விடுவிக்க முடியுமோ அவ்வளவு விரைவாக செயல்படும்படி அய்.நா. பேரவையையும் சர்வதேச சமூகத்தையும் வற்புறுத்த வேண்டும்.
5. தமிழீழப் பகுதியில் பரவலாக சிங்களர்கள் திட்டமிட்டுக் குடியேற்றப்படுகிறார்கள். ஏராளமான சிங்கள இராணுவ முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் குடும்பத்தினருக்கும் குடியேற்றப்பட்ட சிங்களவருக்கும் புதிய குடியிருப்புகள் கட்டப்பட்டு அளிக்கப்படுகின்றன. இவற்றுக்கு நடுவே புத்தர் கோயில்களும் எழுப்பப்படுகின்றன. தமிழர் பகுதியில் தமிழரை சிறுபான்மையினராக ஆக்கும் இம்முயற்சித் தொடருமானால் எதிர்காலத்தில் இலங்கையில் தமிழினம். ஒடுக்கப்பட்ட இனமாக ஆகிவிடும். சிங்கள அரசின் இந்த இனவெறித் திட்டத்தைத் தடுத்து நிறுத்தி தமிழ் மக்களையும் அவர்களின் பாரம்பரிய நிலப்பகுதியையும் பாதுகாத்துத் தரவேண்டிய கடமை அய்.நா.பேரவைக்கு உண்டு என்பதை வற்புறுத்த வேண்டுகிறோம்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.