காவிரி நீரை முழுமையாகத் தடுக்க கருநாடகத்தின் சூழ்ச்சித் திட்டம்! - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 05 ஜூன் 2010 12:53
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் தொடர்பாக கருநாடகம் புதிய நிபந்தனையை விதித்துள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தக் குடிநீர்த் திட்டம் தமிழக எல்லைக்குட்பட்டப் பகுதியில்தான் நிறைவேற்றப்பட இருக்கிறது. காவிரி நீரில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டுள்ள பங்கீட்டிலிருந்து இத்திட்டத்திற்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.
ஏற்கனவே காவிரியிலிருந்து பெங்களூருக்குக் குடிநீர் எடுத்துச் செல்லும் திட்டத்தையும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்தையும் இரு அரசுகளும் நிறைவேற்றிக் கொள்ளலாம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் இருமாநிலங்களுக்கிடையேயும் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது அதற்கிணங்க பெங்களூரு குடிநீர்த்திட்டத்தைக் கருநாடக அரசு நிறைவேற்றிவிட்டது. ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்றுவதில் தமிழக அரசு செய்த தாமதத்தின் விளைவாக இப்போது கருநாடகம் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
இதுவரை விதிக்காத புதிய நிபந்தனையாக சிவனசமுத்திர மின்திட்டத்தை கருநாடக அரசு நிறைவேற்றுவதற்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்க வேண்டும் அப்போதுதான் ஒகேனக்கல் குடிநீர்த்திட்டத்திற்கு தாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருக்கமுடியும் என கருநாடக உள்துறை அமைச்சர் வி.எஸ்.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
கருநாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணைக்கும் தமிழகத்தில் மேட்டூர் அணைக்கும் நடுவில் எந்த அணையும் இல்லை. அதைப்போல, கபினி அணைக்கும் மேட்டுர் அணைக்கும் இடையில் எந்த அணையும் இல்லை. எனவே கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகள் நிரம்பி வழிந்தாலும், இதற்கு நடுவில் உள்ள பகுதியில் பெய்யும் மழை நீரும் எவ்விதத் தடையும் இல்லாமல் மேட்டூருக்கு வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது. இதைத் தடுப்பதுதான் கருநாடகத்தின் திட்டமாகும். தமிழக எல்லைக்கு மிக அருகில் ஒரு அணையைக் கட்டி அதிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்போவதாக கருநாடகம் கூறுகிறது. இந்த அணை கட்டப்பட்டுவிடுமானால் தமிழகத்திற்கு வரும் நீர் முழுமையாகத் தடுக்கப்பட்டுவிடும். பிறகு தமிழகத்திற்கு காவிரி நீர் என்பது கருநாடகத்தின் தயவைப் பொறுத்ததாக அமைந்துவிடும். ஏற்கனவே ஹேமாவதி, ஹேரங்கி, கபினி அணைகளை தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி கருநாடகம் கட்டி முடித்துவிட்டதின் விளைவாக தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. எனவே காவிரிப் பாசன விவசாயிகளின் எதிர்காலத்தை அடியோடு அழிக்கும் இந்தச் சூழ்ச்சித்திட்டத்திற்கு தமிழக அரசு இரையாகக்கூடாது. இது சம்பந்தமாக கருநாடக அரசுடன் எவ்வித பேச்சுவார்த்தையும் நடத்தக்கூடாது என நான் வலியுறுத்துகிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.