ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011 13:03 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைப் பெற்றெடுத்த அன்னை பார்வதி அம்மையார் அவர்கள் இன்று அதிகாலை 6:10 மணிக்கு காலமான செய்தியை அறிந்து உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஈழப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் கூட அங்கிருந்து வெளியேறி பத்திரமான இடம் தேடி அவரும் அவரது கணவரும் வாழ முயலவில்லை. தங்கள் மக்களின் துயரத்தில் பங்கு கொண்டு அவர்களுடனேயே அத்தனை துன்பங்களையும் தாங்கி இறுதியாக சிங்கள இராணுவச் சிறையில் பல மாதங்கள் கொடுமைகளை அனுபவித்த போதிலும் அவர் கொஞ்சமும் கலங்கவில்லை. சிறையில் தனது கணவரை பறிகொடுத்தத் துயரம் அவரது உடல்நிலையையும் மனநிலையையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கி விட்டது. இந்த நிலையில் அவர் வெளிநாட்டில் வாழும் அவரது மூத்த மகனும் அவரது மகள்களும் மற்ற நெருங்கிய உறவினர்களும் இலங்கை சென்று சந்தித்து ஆறுதல் கூற முடியவில்லை. அவரைத் தமிழகம் கொண்டு வந்து அவரோடு நெருங்கிப் பழகிய குடும்பங்களோடு தங்க வைத்து மன ஆறுதலையும் மருத்துவ சிகிச்சையையும் அளிக்க செய்யப்பட்ட ஏற்பாட்டினை இந்திய தமிழக அரசுகள் மனித நேயம் கொஞ்சமும் இல்லாமல் முறியடித்தன. தமிழகத்தில் வந்து இறங்கிய அவரை ஈவு இரக்கமில்லாமல் திருப்பி அனுப்பிய கொடுமையும் நிகழ்ந்தது. இதெல்லாம் அவருடைய மனநிலையை மேலும் பாதித்து விட்டன. இந்த சூழ்நிலையிலேயே மருத்துவ சிகிச்சை பயனளிக்காமல் அவர் காலமாகியிருக்கிறார் என்பதை வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தும் வகையில் திங்கள் கிழமை (21-2-2011) அன்று மாலை 4 மணிக்கு உலகமெங்கும் உள்ள தமிழர்கள் கருப்புக் கொடி ஊர்வலங்கள், இரங்கல் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துமாறு வேண்டிக் கொள்கிறேன். |