மக்களை ஏமாற்ற தி.மு.க. - காங்கிரசு ஆடும் நாடகம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 06 மார்ச் 2011 13:09
மக்கள் உரிமைக்கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :-
மத்தியகாங்கிரசுகூட்டணி அரசிலிருந்துவிலகி, வெளியிலிருந்து பிரச்னை அடிப்படையில் ஆதரவு தரப்போவதாக தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி அறிவித்துள்ளார்.
சட்டமன்றத்தேர்தலுக்கு 63 தொகுதிகளை அதுவும் தாங்கள் விரும்பும் தொகுதிகளை அளிக்க வேண்டும் என காங்கிரசு நிர்பந்தித்ததின் விளைவே இது என அவர் கூறியிருப்பது நம்பத்தகுந்ததாக இல்லை. 60 தொகுதிகளை விட்டுத்தர முன்வந்தவர் மேலும் 3 தொகுதிகளைத் தருவது பெரிதல்ல. ஏற்கனவே 1980 ஆம் ஆண்டில் காங்கிரசுக்கு 112 தொகுதிகளை வாரித்தந்தவர் கருணாநிதியே. எனவே, தி.மு.க – காங்கிரசு உறவு கசந்ததற்குத் தொகுதிப்பிரச்னை காரணமாக இருக்க முடியாது. மக்களை ஏமாற்றவும் திசை திருப்பவும் இந்த நாடகம் ஆடப்படுகிறது.
சுதந்திர இந்தியாவில் மிகப்பெரிய ஊழலான ஸ்பெக்ட்ரம் ஊழலை தி.மு.கவைச் சேர்ந்த ராசாசெய்ததன் மூலம் காங்கிரசும் கூட்டணிக் கட்சிகளும், பெரும் தலைக்குனிவிற்கு ஆளானதோடு, எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றம் முடக்கப்படும் அவலத்தையும் சந்திக்க நேர்ந்தது.
காங்கிரசே நினைத்தாலும் இந்த ஊழலில் தொடர்புடையவர்களைக் காப்பாற்ற இயலாத வகையில் உச்சநீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் மத்திய புலனாய்வுத் துறை செயல்படுகின்றது. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் சிலரின் தலைக்கு மேல்தொங்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் கத்தியிலிருந்து தப்புவதற்கு கருணாநிதி கையாளும் மிரட்டல் தந்திரமே இது.
ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு தி.மு.க.வைப் பொறுப்பாளியாக்கி, தான் தப்ப காங்கிரசு நினைக்கிறது. ஈழத் தமிழர் படுகொலையினால் தமிழக மக்களின் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் காங்கிரசுடன் கொண்டுள்ள உறவைத் துண்டிப்பதன் மூலம் தான் கரையேறலாம் என தி.மு.க கருதுகிறது. இரண்டு கட்சிகளுமே ஒன்றையொன்று சுமையாகக் கருதுகின்றன.
1996 சட்ட மன்றத்தேர்தலின் போது அ.தி.மு.கவுடன் காங்கிரசு கூட்டுச்சேர்ந்த போது காங்கிரசைப் பிளவு படுத்தி, தமிழ் மாநில காங்கிரசை உருவாக்கி தன்னுடன் சேர்த்துக்கொண்டவர் கருணாநிதி. கட்சிகளைப்பிளவுபடுத்தும் கலையில் வல்லவரான அவர் இப்போதும் அதைச் செய்வார். ஆனால் இம்முறை மக்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர். அவர்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது.
 
காப்புரிமை © 2022 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.