பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள மறுத்ததற்கு பாராட்டு |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 04 டிசம்பர் 2011 18:10 |
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தில்லியில் இரு மாநில அதிகாரிகள் மட்டத்தில் நடைபெறவிருந்த பேச்சு வார்த்தையில் பங்கேற்கப் போவதில்லை என தமிழக அரசு அறிவித்திருப்பதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.
பெரியாறு அணையின் வலிமை குறித்தும் புதிய அணையை கட்ட வேண்டும் என்ற கேரளாவின் திட்டம் குறித்தும் ஆராய்வதற்காக உச்சநீதிமன்றம் அமைத்த உயர்நிலைக் குழு திசம்பர் 5-ஆம் தேதி கூடி இறுதி முடிவை அறிவிக்க இருக்கிறது. குழுவின் முடிவு தனக்கு சாதகமாக இல்லை என உணர்ந்து கொண்ட கேரளம் அதை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சியாகத்தான் அணையில் வெடிப்புகள் தோன்றி இருக்கின்றன என்ற பொய்க் கூப்பாடு போடுகிறது.இரு மாநில முதலமைச்சர்களையும் அழைத்துப் பேச வேண்டுமென பிரதமர் கேரள முதலமைச்சர் வலியுறுத்தி இருப்பதும் சூழ்ச்சிகரமானது. மீண்டும் பேச்சுவார்த்தைத் தொடங்கப்பட்டால் அதையே காரணமாக காட்டி உச்சநீதிமன்றம் இறுதி தீர்ப்பு வழங்க இருப்பதைத் தடுத்துவிடலாம் எனற் திட்டத்துடன் கேரளம் விரித்த வலையில் சிக்க மறுத்த தமிழக அரசை மீண்டும் பாராட்டுகிறேன். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை எந்த காரணத்தைக் கொண்டும் முதலமைச்சர்கள் மட்டத்திலேயோ அதிகாரிகள் மட்டத்திலேயோ எத்தகைய பேச்சுவார்த்தைக்கும் இணங்கக் கூடாது என தமிழக முதலமைச்சரை வேண்டிக் கொள்கிறேன். |