சிதம்பரத்தை மிரட்டும் கேரள அரசியல்வாதிகள் - பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2011 18:11 |
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : கேரள மாநிலத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலை மனதில் கொண்டு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையை கேரள அரசியல்வாதிகள் ஊதி பெரிதாக்குகிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளதை கண்டித்து கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் உட்பட பல கட்சித்தலைவர்களும் சிதம்பரத்தை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென கூக்குரலிட்டுள்ளனர்.
மத்திய அமைச்சராகப் பொறுப்பு வகிக்கும் ஒருவர் எவ்வாறு இப்படி கூறலாம் என்றும் கண்டித்துள்ளனர்.மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கும் ஏ. கே. அந்தோணி கடற்படை நீர்மூழ்கி வீரர்களை பெரியாறு அணைக்கு அனுப்பி அணையை சோதனை செய்ய ஆணையிட்டு அவர்களும் தமிழக அரசின் அனுமதியின்றி அவ்வாறு செய்தார்கள். உச்சநீதிமன்றத்தின் பரிசீலனையில் பெரியாறு அணைப் பிரச்னை இருக்கும் போது இவ்வாறு ஏ. கே. அந்தோணி அத்துமீறி செயல்பட்ட போது அதை கேரள அரசியல்தலைவர்கள் உற்சாகமாகப் பாராட்டி வரவேற்றார்கள். ஆனால் இப்போது ஒரு பொதுக் கூட்டத்தில் மூத்த காங்கிரசு தலைவர் என்ற முறையில் ப. சிதம்பரம் பேசியதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. கேரளத்தின் சார்பில் மத்திய அமைச்சர்களாக இருக்கும் ஏ. கே. அந்தோணி, வயலார் ரவி போன்றவர்கள் முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை சம்பந்தமாக பிரதமரை சந்தித்து தங்கள் தரப்பை வற்புறுத்தியிருக்கிறார்கள். ஆனால் தமிழகத்தின் சார்பில் மத்திய அமைச்சர் பதவி வகிப்பவர்கள் பிரதமரைச் சந்தித்து நமது தரப்பை நியாயங்களை எடுத்துக் கூற முன்வரவில்லை. ஆனால் மூத்த காங்கிரசு தலைவர் என்ற முறையில் ப. சிதம்பரம் இப்போதாவது முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னை குறித்து தமிழ்நாட்டின் நிலைக்கு ஆதரவு தெரிவித்துப் பொதுக்கூட்டத்திலேயாவது பேசியிருப்பதை நான் பாராட்டுகிறேன். மத்திய அரசில் அங்கம் வகிக்கும் மற்ற தமிழர்களும் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்க முன் வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறேன். |