பட்டினிப் போராட்டத்தை நிறுத்துக! கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்க! பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 25 மார்ச் 2012 19:58 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை அணுசக்தி எதிர்ப்பு மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், புஷ்பராயன் மற்றும் பலர் மேற்கொண்டிருக்கும் சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை நிறுத்தி வைக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.
நேற்று தொலைபேசி மூலமும் உதயகுமார் அவர்களிடம் எனது வேண்டுகோளைத் தெரிவித்தேன்.8 மாத காலத்திற்கும் மேலாக ஒற்றுமையுடன் போராடி வரும் கூடங்குளம் மக்களின் நோக்கத்தை முன்னடத்திச் செல்லவும் அது குறித்து மத்திய மாநில அரசுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தவும் உதயகுமார் போன்ற போராட்டகுழுத் தலைவர்கள் உடல்நலனுடன் இருப்பது அவசியமாகும். கூடங்குளம் பகுதி மக்களிடையே குடிகொண்டிருக்கும் அச்சத்தைப் போக்க வேண்டிய அவசியத்தை ஏற்கெனவே வலியுறுத்திய முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். போராட்டக் குழுவினரை அழைத்துப் பேசிப் பிரச்னைக்குத் தீர்வு காண முயலவேண்டும். போராட்டத்தை முன்னின்று நடத்துபவர்களுக்கு அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என்பதையும் அணு உலையினால் விளையக்கூடிய அபாயத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதற்காகவே அவர்கள் போராடுகிறார்கள் என்பதையும் உணர்ந்து உடனடியாக செயல்படுமாறு முதலமைச்சரை வேண்டிக் கொள்கிறேன். அதற்கு முதற்படியாக, கைது செய்யப்பட்டுள்ள போராட்டக் குழுவைச் சேர்ந்தவர்களையும் அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்களையும் விடுவிப்பதோடு வழக்குகள் அனைத்தையும் உடனடியாகத் திரும்பப் பெற்று, பேச்சுவார்த்தைக்கு ஏற்ற சுமூக சூழ்நிலையை உருவாக்குமாறு முதலமைச்சரை வேண்டிக்கொள்கிறேன். |