திரைப்பட விழாக்களுக்கு நேரம் ஒதுக்கும் முதலமைச்சர் மருத்துவர்களைச் சந்திக்க மறுப்பது ஏன்? - பழ.நெடுமாறன் கேள்வி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 15 ஜூலை 2009 12:39
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
உதவித்தொகை உயர்வு கேட்டுப் பயிற்சி மருத்துவர்களும் பட்டமேற்படிப்பு மருத்துவர்களும் இருவார காலத்திற்கும் மேலாக அறவழியில் போராடி வருகிறார்கள்.
அவர்களை அழைத்துப்பேசி பிரச்சனையைத் தீர்க்க வேண்டிய முதலமைச்சர் அவ்வாறு செய்யாமல் தன்னிச்சையாகவும் கண்துடைப்பு முறையிலும் ஊதிய உயர்வை அறிவித்ததை மருத்துவர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். போராட்டத்தை நிறுத்திவிட்டு வந்தால் மட்டுமே பேச முடியும் என முதலமைச்சர் மிரட்டுவது எந்தவகையிலும் ஏற்கத் தக்கதல்ல.
முதலமைச்சரின் இந்த பிடிவாதப்போக்கின் விளைவாக பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாலின் கொள்முதல் விலை உயர்த்தப்படவேண்டும் என விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி ஏளனம் செய்கிறார் முதலமைச்சர்.
சமச்சீர்க் கல்வி முறையை கொள்கை அளவில் ஏற்றுக்கொண்ட அரசு அதை நடைமுறைப்படுத்தாமல் காலம்கடத்தி வருவதற்கு எதிராக இந்திய மாணவர் கூட்டமைப்பினர் போராடியபோது கடும் அடக்குமுறையைக் கையாண்டு ஒடுக்குவதற்கு முயற்சி செய்கிறார்.
மக்களின் போராட்டங்களை மதித்துப் பேசித் தீர்ப்பது முதலமைச்சரின் சனநாயகக் கடமையாகும். ஆனால் அந்தக் கடமையை செய்ய முதலமைச்சருக்கு நேரமில்லை. திரைப்பட தொடக்கவிழாக்களில் கலந்துகொள்ள நேரம் ஒதுக்கும் முதலமைச்சருக்கு மருத்துவர்கள், விவசாயிகள், மாணவர்கள் ஆகியோரின் பிரதிநிதிகளைச் சந்திக்க நேரமில்லை என்று கூறுவது வெட்கக்கேடானது ஆகும். முதலமைச்சரின் சனநாயக விரோதப்போக்கை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.