செஞ்சோலை தாக்குதல்களுக்கு எதிராக அணி திரளுவீர் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2006 13:22 |
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : இலங்கையில் தமிழர் பகுதியில் வல்லிபுனம் செஞ்சோலை வளாகத்தின் மீது சிங்கள விமானக் குண்டு வீச்சின் விளைவாக 93-க்கு மேற்பட்ட பள்ளிச்சிறுமிகள் படுகொலை செய்யப்பட்டும் 163-க்கும் மேற்பட்ட சிறுமிகள் படுகாயமடைந்தும் உள்ள செய்தி மனித நேயம் கொண்ட அனைவரையும் பதைபதைக்கச் செய்துள்ளது. ஏற்கெனவே போரில் பெற்றோரை இழந்து அனாதைகளாகி செஞ்சோலை அமைப்பில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தைகளுக்கு நேர்ந்த கதி நம்மை நெக்குருக வைக்கிறது.
சிங்கள வெறியர்களின் கொலை வெறி தமிழ்ச் சிறுமிகளைக் கூட விட்டு வைக்கவில்லை. இந்தக் கொடிய செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழகமெங்கும், ஆகஸ்டு 18 முதல் ஒரு வார காலத்திற்குள், வசதிப்பட்ட நாளில், கறுப்புப் பட்டைகள் அணிந்தும், கறுப்புக் கொடிகள் தாங்கியும் அமைதி ஊர்வலங்கள் நடத்துமாறு அனைத்துத் தமிழர் அமைப்புகளையும் உணர்வாளர்களையும் தமிழக மக்களையும் வேண்டிக் கொள்கிறேன். |