பட்டினியால் வாடும் ஈழத்தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்கள் அனுப்ப வேண்டுகோள் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 12 டிசம்பர் 2006 13:29 |
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் சென்னையில் 9-12-06 சனிக்கிழமை மாலை பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்றபோது 50க்கும் மேற்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டார்கள்.
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. "இலங்கையில் யாழ்ப்பாணம் செல்லும் நெடுஞ்சாலையை சிங்கள அரசு மூடியதின் விளைவாக ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் பட்டினியால் வாடுகிறார்கள். உணவு, மருந்து பற்றாக்குறைவின் விளைவாக மக்கள் மடியும் அபாயம் உருவாகியுள்ளது. சிங்கள அரசின் மனித நேயமற்ற இந்த நடவடிக்கையை இக்குழு வன்மையாக கண்டிக்கிறது. பட்டினியால் வாடும் நமது சகோதரத் தமிழர்களுக்கு உணவுப் பொருட்கள் மருந்துகள் ஆகியவற்றை சேகரிக்கும் இயக்கத்தை டிசம்பர் 15 முதல் 31 வரை தமிழகம் எங்கும் நடத்துவது என்றும் சேகரிக்கப்பட்டப் பொருட்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலம் அனுப்பி வைப்பது என்றும் இக்குழு முடிவு செய்கிறது. தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்புகளும் தோழமை அமைப்புகளும் இப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு உணவு, மருந்துப் பொருட்களைத் திரட்டும்படி இக்குழு வேண்டிக்கொள்கிறது."
|