தமிழ்ச்செல்வன் இரங்கல் ஊர்வலத்திற்கு தடை: தடையைத் தகர்த்து தமிழர் மானத்தை காக்க முன் வருக - பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 11 நவம்பர் 2007 13:48 |
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு பொறுப்பாளர் பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்கள் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கும் ஊர்வலத்திற்குச் சென்னை மாநகர ஆணையாளர் தடை விதித்திருப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இது தமிழக அரசின் மனித நேயமற்றப் போக்கினையும் தமிழர் விரோதப் போக்கினையும் எடுத்துக் காட்டுகிறது.
தமிழ்ச்செல்வனுக்காக இரங்கல் ஊர்வலம் நடத்துவது சட்டப்படி ஏற்புடையதாக இல்லையென ஆணையாளர் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து முதலமைச்சர் கருணாநிதி எழுதிய கவிதையும் சட்டப்படி ஏற்புடையது இல்லையென ஆணையாளர் கருதுகிறாரா? தமிழர் ஒருவருக்கு இரங்கல் தெரிவிப்பதே சட்ட விரோதமென காங்கிரசுக்காரர்கள் தெரிவித்த எதிர்ப்பிற்குப் பணிந்து தமிழக அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை தமிழருக்குத் தலைக் குனிவை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும். திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு மன்றோ சிலையின் முன்னிருந்து திட்டமிட்டப்படி தமிழ்ச்செல்வன் இரங்கல் ஊர்வலம் புறப்படும். அனைத்துக் கட்சித் தோழர்களும் தமிழ் உணர்வாளர்களும் திரண்டு வந்து தடையைத் தகர்த்து தமிழர் மானத்தை காக்க முன் வருக என அழைக்கிறேன். |