இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மகேசுவரன் கொலை - பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
புதன்கிழமை, 02 ஜனவரி 2008 13:55 |
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்படுவது தொடர் கதையாக நீடித்து வருகிறது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினராக மகேசுவரன் புத்தாண்டு நாளன்று கோவிலில் வழிபாடு நடத்திக் கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்.
2006-ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவின் போது தேவாலயத்தில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராசசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். 2007-ஆம் ஆண்டு மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான நடராசா ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்டார். தற்போது மகேசுவரன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தாவின் கும்பல்தான் இந்த படுகொலையை செய்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் நடைபெறும் படுகொலைகள் அனைத்தும் இந்த கும்பலால்தான் செய்யப்படுகிறது. அவர்களை குறித்த அனைத்து விவரங்களையும் சனவரி 8#ஆம் தேதி கூடும் நாடாளுமன்றத்தில் வெளியிடப் போவதாக அண்மையில் மகேசுவரன் அறிவித்திருந்தார். அதன் காரணமாகவே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்திய ரா உளவுத்துறையுடன் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நெருங்கிய உறவு உண்டு. அதன் உதவியுடன் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களையும் மற்றுமுள்ள அமைச்சர்களையும் தில்லியில் அடிக்கடி சந்தித்து வருபவர் டக்ளஸ் தேவானந்தா ஆவார். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்படுவதற்கும் ரா உளவு துறைக்கும் நெருங்கியத் தொடர்பு உண்டு என்பதை யாரும் மறுக்க இயலாது. சிங்கள இனவெறி அரசுக்கு இந்திய அரசு தொடர்ந்து அளித்து வரும் ஆதரவின் விளைவாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொலை செய்ய சிங்கள அரசு துணிவுப் பெற்றுள்ளது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், சிவாஜிலிங்கம் போன்றவர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து வரவிருப்பதை அறிந்து இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே பாதுகாப்பற்ற நிலை நிலவுமானால் சாதாரண தமிழர்களின் நிலை மிகவும் பாதுகாப்பற்றதாகும். தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை தடுக்க இந்திய அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையேல் இக்கொலைகள் அதனுடைய ஆதரவில்தான் நடக்கிறது என்ற குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படும். |