புலிகளை ஆதரித்துப் பேசுவது சட்ட விரோதம் அல்ல |
|
|
|
புதன்கிழமை, 30 ஜனவரி 2008 13:58 |
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : விடுதலைச் சிறுத்தைகள் இயக்கம் நடத்திய கருத்துரிமை மாநாடு புலிகளின் ஆதரவு மாநாடு என்றும் எனவே அந்த இயக்கத்தை தடை செய்ய வேண்டும் என்றும் திருமாவளவனை கைது செய்ய வேண்டுமென்றும் அ.தி.மு.க மற்றும் காங்கிரசு கட்சியினர் சட்டமன்றத்தில் கூக்குரல் எழுப்பியுள்ளனர்.
அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் என் மீதும் வைகோ அவர்கள் மீதும் மற்றும் பல தோழர்கள் மீதும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டு பொடா சட்டத்தில் அனைவரும் கைது செய்யப்பட்டோம். மேலும் பல கூட்டங்களில் புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக என் மீதும் மற்றும் பல தலைவர்கள் மீது தமிழகமெங்கும் வழக்குகள் தொடுக்கப்பட்டன. தி.மு.க ஆட்சியின் போது நாங்கள் நடத்திய பல மாநாடுகள் புலிகளின் ஆதரவு மாநாடுகள் எனக் குற்றம் சாட்டப்பட்டுத் தடை செய்யப்பட்டன. ஆனால் பொடா வழக்கு உள்பட அ.தி.மு.க தி.மு.க ஆட்சிகளில் தொடுக்கப்பட்ட அனைத்து வழக்குகளிலும் நாங்கள் விடுதலை செய்யப்பட்டோம். எங்கள் மாநாடுகளுக்கு விதிக்கப்பட்டத் தடை செல்லாது என உயர்நீதிமன்றம் பல முறை தீர்ப்பளித்தது. புலிகளுக்கு ஆதரவாகப் பேசுவது குற்றமல்ல என உள்ளூர் நீதிமன்றங்களிலிருந்து உச்ச நீதிமன்றம் வரை மிகத் தெளிவான தீர்ப்புகளை வழங்கியிருப்பதை எண்ணிப் பாராமலும் அவற்றை மதிக்காமலும் அ.தி.மு.க#வினரும் காங்கிரசு கட்சியினரும் சட்டமன்றத்தில் கூப்பாடு போட்டிருப்பது அவர்களின் அறியாமையையும் நீதியை மதிக்காத ஆணவப் போக்கையுமே எடுத்துக் காட்டுகிறது. இந்த போக்கினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். அ.தி.மு.க காங்கிரசு அச்சுறுத்தலுக்கு அடிபணிந்து கருத்துரிமையைப் பறிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப் போவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்திருப்பது அப்பட்டமான ஜனநாயக விரோதப் போக்காகும். நீதிமன்றங்கள் அளித்தத் தீர்ப்புக்கு எதிராக இத்தகைய சட்டத்தை அவர் கொண்டு வருவாரானால் சகல ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு நின்று அதை முறியடிக்கப் போராடுவோம் என எச்சரிக்கிறேன். |