கடலூர் தமிழர் உரிமை மாநாட்டிற்கு தடை - பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 பெப்ரவரி 2008 13:59 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : 2-2-2008 அன்று கடலூரில் நடைபெறவிருந்த தமிழர் உரிமை மாநாட்டிற்கு வழக்கம் போல கடைசி நேரத்தில் காவல் துறை தடை விதித்துள்ளது.
பட்டினி கிடக்கும் யாழ் தமிழர்களுக்காக மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ஒரு கோடி ரூபாய் பெறுமான உணவு மற்றும் மருந்துப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலமாக அனுப்பி வைக்க உதவுவதாக உறுதி கூறி முதலமைச்சர் மு. கருணாநிதி அளித்த வாக்குறுதி நான்கு மாத காலமாகியும் நிறைவேற்றப்படாததை கண்டித்தும் ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுதம் வழங்குவதைக் கண்டித்தும் இம்மாநாடு நடைபெறவிருந்தது. மாநாட்டுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவடைந்துவிட்ட நிலையில் திடீரென நேற்று இரவில் மாநாட்டிற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. ஏற்கெனவே பலமுறை எங்கள் மாநாடுகளுக்கு தடை விதிக்கப்பட்ட போது உயர் நீதிமன்றம் தலையிட்டு தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு எங்கள் மாநாடுகளுக்கு அனுமதியும் அளித்துள்ளது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதே தேசத் துரோகம் என சித்தரிக்கும் தமிழ்ப் பகைவர்களின் மிரட்டலுக்கு முதலமைச்சர் மு. கருணாநிதி பணிந்து விட்டதையே இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது. ஏற்கெனவே உயர் நீதிமன்றம் இத்தகைய தடைகள் அரசியல் சட்டம் வழங்கியுள்ள ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானதாகும் என தீர்ப்பு வழங்கிய நிலையில் மீண்டும் மீண்டும் ஜனநாயக விரோத அடிப்படையில் முதலமைச்சர் கருணாநிதி செயல்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். உயர் நீதிமன்றத்தில் இத்தடையை எதிர்த்து வழக்குத் தொடுக்க ஏற்பாடுகள் நடைபெறுகின்றன என்பதையும் அனைவருக்கும் தெரித்து கொள்கிறேன். |