இராசபக்சேவைக் காப்பாற்ற முயன்ற இந்தியப் படை : பழ.நெடுமாறன் கண்டனம் |
|
|
|
சனிக்கிழமை, 14 நவம்பர் 2009 15:22 |
இலங்கையில் இராணுவப் புரட்சி ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தனது ஆட்சியைக் காப்பாற்ற இந்தியப் படையை அனுப்புமாறும் இந்திய அரசுக்கு இராசபக்சே விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்தியப் படை அக்டோபர் 15ஆம் தேதி ஆயத்த நிலையில் வைக்கப்பட்டதாக இலங்கை கூட்டுப்படைத் தளபதி பொன்சேகா பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருக்கிறார்.
கடந்த இரு நாட்களுக்கு முன்பாக இராசபக்சேயை நேரில் சந்தித்தபோதும் இந்தக் குற்றச்சாட்டை பொன்சேகா கூறியபோது அதை மறுக்கும் வகையில் இராசபக்சே எதுவும் கூறவில்லை என்றும் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கையில் போரின் இறுதிக் கட்டத்தில் சிங்கள இராணுவத்தினால் சுற்றி வளைத்துக் கொள்ளப்பட்ட மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்களைக் காப்பாற்றுவதற்கு உடனடியாகத் தலையிடுமாறு இந்திய அரசை தமிழக மக்கள் ஒன்றுபட்டு வற்புறுத்தியபோது “"இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினையில் தலையிட முடியாது' என இந்தியப் பிரதமர் மறுத்தார். ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டத் தமிழர்கள் பதைக்கபதைக்க படுகொலை செய்யப்பட்ட போதும், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தொடர்ந்து கொல்லப்பட்டபோதும் இராணுவ ரீதியாகத் தலையிட மறுத்த இந்திய அரசு, இராசபக்சேயைக் காப்பாற்ற படையை ஆயத்த நிலையில் வைத்தது என்ற செய்தி தமிழர்களை அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. மேலும் இலங்கைக்கு இராணுவ ரீதியாக உதவி எதுவும் செய்யவில்லை என்று இடைவிடாமல் மறுத்து வந்த இந்திய அரசு, தான் கொடுத்த இரு போர்க் கப்பல்களை திரும்பக் கேட்டுள்ளது என்ற செய்தியும் இந்திய அரசின் உண்மை உருவத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது. தமிழக மக்கள் இனியாவது இந்திய அரசின் தமிழர் விரோதப் போக்கை அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். |