கல்விக்கொள்ளை அடித்த அரசியல் குடும்பங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் |
|
|
|
புதன்கிழமை, 20 ஜனவரி 2010 15:46 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி அமைக்கப்பட்ட குழு இந்தியாவில் உள்ள நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தி உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள அறிக்கை பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
இந்தியா முழுவதிலுமுள்ள 126 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 38 மட்டுமே சரியாகச் செயல்படுகின்றன. 44 பல்கலைக் கழகங்கள் தகுதியற்றவை அவற்றில் 17 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில் உள்ளன. எஞ்சியுள்ள 44 பல்கலைக்கழகங்கள் தங்கள் தரத்தை உயர்த்திக்கொள்ள 3 ஆண்டுகால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது 126 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களில் 88 பல்கலைக்கழகங்கள் முழுமையான தகுதிபெற்றிருக்கவில்லை என்பது வெளியாகியுள்ளது. தகுதியற்ற இந்தப் பல்கலைக் கழகங்களில் இடஒதுக்கீடு முறை செயல்படுத்தப்படுவதில்லை. ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடமளிக்கப்படுவதில்லை. இவை கல்வி, வணிக நிலையங்களாக மாறி பணம் படைத்த மாணவர்களுக்கு மட்டுமே இடமளித்து வருகின்றன. பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைகளை அப்பட்டமாக மீறிஉள்ளன. பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பவே சில கல்லூரிகள் நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களாக உருவாக்கப்பட்டுள்ளன. தகுதியற்ற கல்லூரிகளுக்கு அரசியல் தலையீட்டின் காரணமாக நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதி வழங்கப்பட்டள்ளது. இவைகளில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட அதிகமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒரு கல்லூரிக்கு அனுமதி பெற்றுக்கொண்டு மூன்றுக்கு மேற்பட்ட கல்லூரிகளை அனுமதியில்லாமலே இவைகள் நடத்திவந்துள்ளன. இக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் எவ்வித வசதியும் அற்ற சூழ்நிலையில் கொத்தடிமைகள் போல நடத்தப்படுகிறார்கள். ஆசிரியர்களோ குறைந்த ஊதியத்தில் வேலைப் பார்க்கும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மேற்கண்ட குறைபாடுகளும் ஊழல்களும் நிறைந்த இவற்றுக்கு நிகர்நிலைப் பல்கலைக் கழகத் தகுதி வழங்கப்பட்டதற்கு ஒரே காரணம் இந்த கல்வி நிலையங்கள் அரசியல் குடும்பங்களினால் நடத்தப்பட்டு வருவதே ஆகும். இவற்றின் தகுதியை மட்டும் இரத்து செய்தால் போதாது. இவற்றுக்கு தகுதி வழங்க காரணமான அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பல இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்கிய இந்த நிறுவனங்களின் வேந்தர்கள், துணைவேந்தர்கள் மீது கிரிமினல் சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட அதிகப்படியான கட்டணங்கள் உடனடியாகத் திரும்பக் கொடுக்கப்படவேண்டும். இந்த கல்வி நிலையங்களில் படித்துகொண்டிருக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாத அளவுக்குப் பாதுகாக்கப்படவேண்டும். தமிழ்நாட்டில் பகிரங்கமாக இந்த கல்வி கொள்ளையை சில அரசியல் குடும்பங்கள் நடத்தியபோது அதை வேடிக்கைப் பார்த்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காத தமிழக அரசும் மக்களிடமும் மாணவர்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்கவேண்டும். |