ஜாவாக் கடலில் தத்தளிக்கும் தமிழ் அகதிகளை காப்பாற்றுக - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 13 மார்ச் 2010 15:52
இலங்கையில் சிங்கள இராணுவத்தின் வெறியாட்டத்திற்கு அஞ்சி உயிர் பிழைப்பதற்காக பழுதடைந்த கப்பல் ஒன்றின் மூலம் ௨௫௭ தமிழர்கள் ஆஸ்திரேலியா நோக்கி பயணம் செய்தனர். நடுவழியில் ஜாவா கடல் அருகே இந்தோனேஷிய கடற்படை அவர்களைத் தடுத்து நிறுத்தியது.
கடந்த 150 நாட்களுக்கு மேலாக அந்தக் கப்பலில் உள்ள ஆண், பெண், குழந்தைகள் உட்பட அனைவரும் உணவோ, மருந்தோ போதுமான அளவு இல்லாமல் வாடி வருகின்றனர். கப்பலை விட்டு கரையிறங்கினால் தங்களை இந்தோனேஷிய அரசு இலங்கைக்கே திருப்பியனுப்பிவிடும் என்ற அச்சத்தில் அவர்கள் கரையிறங்க மறுத்துத் தொடர்ந்து போராடி வருகிறார்கள். நாளுக்கு நாள் அவர்கள் நிலை மிகமோசமாகி வருகிறது.
ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரூடூ, இந்தோனேஷியக் குடியரசுத் தலைவர் சுசிலோ பாங் பேங்க் யுதோனோ ஆகிய இருவரும் மார்ச் 10ஆம் தேதி ஆஸ்திரேலிய கன்பெரா நகரில் சந்தித்துப் பேசினார்கள். ஆனாலும் தமிழ் அகதிகளுக்கு ஆஸ்திரேலியாவில் இடங்கொடுத்து ஆதரிப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.
எனவே இந்த அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும்படி ஆஸ்திரேலிய அரசை வலியுறுத்த வேண்டிய கடமை இந்திய அரசுக்கும் உலக நாடுகளுக்கும் உண்டு. இந்தக் கடமையை அவர்கள் செய்ய முன்வரும்படி உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கையை மனிதாபிமானத்தோடு அணுகி தமிழ் அகதிகளின் உயிர்களைக் காப்பாற்ற முன்வருமாறு இந்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.