தமிழகம் ஒப்புக்கொண்டதால்தான் ஐவர்குழு அமைக்கப்பட்டது - உச்சநீதிமன்ற நீதிபதி வெளியிட்ட திடுக்கிடும் செய்தி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 19 மார்ச் 2010 15:54
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப்பெரியாறு அணையின் வலிமையை ஆய்வுசெய்வதற்காக உச்சநீதிமன்றம் அமைத்த குழுவிற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதனை இரத்து செய்ய வேண்டும் எனக்கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வின் தலைவர் பி.கே.ஜெயின்
"முல்லைப்பெரியாறு அணையின் வலிமையை ஆய்வு செய்வதற்கான குழு தமிழகத்தின் ஒப்புதலுடன் அமைக்கப்பட்டது. அப்போது ஒப்புதல் தெரிவித்துவிட்டு இப்போது எதிர்ப்பது ஏன்? என எழுப்பிய கேள்விக்கு தமிழக அரசின் வழக்கறிஞர் சரியான முறையில் பதிலளிக்கத் தவறியிருக்கிறார்.
உச்சநீதிமன்றத்தில் வெளியான இந்தச் செய்தி தமிழக விவசாயிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. பெரியாறு அணையின் வலிமையை ஏற்கனவே மத்திய அரசினாலும் உச்சநீதிமன்றத்தினாலும் அமைக்கப்பட்ட குழுக்கள் பரிசோதனை செய்து அணை வலிமையாக இருப்பதை உறுதிசெய்தன. அதை ஏற்றுக்கொண்டுதான் உச்சநீதிமன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடிக்கு உயர்த்தலாம் என ஆணைப்பிறப்பித்தது. இந்த நிலையில் மீண்டும் அணையைப் பரிசோதிக்க ஒரு குழு அமைக்கப்பட்டதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டதே காரணம் என்ற உண்மை இப்போது அம்பலம் ஆகியிருக்கிறது.
முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில் கடந்த 30 ஆண்டுகாலமாக தொடர்ந்து தமிழக அரசுகள் காட்டிய மெத்தனப்போக்கு, தவறுகள் விளைவாகத்தான் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைக்கு எதிராக தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்ததின் விளைவாகவும் இதற்கு எதிரான போராட்ட அறிவிப்புகளின் விளைவாகவும் தமிழக அரசு மீண்டும் உச்சநீதிமன்றத்தில் மனு செய்திருக்கிறது. இல்லையென்றால் எதுவும் செய்திருக்காது.
எனவே மே 28ஆம் தேதியன்று கேரளத்திற்கு செல்லும் 13 சாலைகளிலும் நடத்தப்படவிருக்கும் மறியல் போராட்டத்தைத் தீவிரமாக நடத்துவதைத் தவிர, நமது உரிமையைப் பாதுகாக்க வேறு வழியில்லை என்பதை உணர்ந்து இந்தப் போராட்டத்தில் பங்கெடுக்க முன்வருமாறு அனைத்து விவசாயிகள் சங்கங்களையும், அனைத்து அரசியல் கட்சிகளையும் வேண்டிக்கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.