தமிழர்களை வேட்டையாட இராசபக்சேவுக்கு அனுமதி இந்திய-இலங்கை உடன்பாட்டின் விளைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 12 ஜூன் 2010 16:25
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் - இலங்கை அதிபர் இராசபக்சே ஆகியோர் செய்துகொண்டுள்ள ஏழு உடன்பாடுகளின்படி ஈழத்தமிழர்களை முற்றிலுமாக சிங்கள இனவெறி பலிபீடத்தில் இந்திய அரசு காவுகொடுத்துவிட்டது. இதைக்கண்டுத் தமிழர்களின் நெஞ்சங்கள் எரிமலையாய் குமுறுகின்றன.
முதலாவதாக இருநாடுகளுக்கிடையே உயர்மட்ட அளவில் இராணுவ ரீதியான கருத்துப் பரிமாற்றங்கள் செய்துகொள்ளப்படும். சிங்கள இராணுவத்தினருக்கு இந்திய இராணுவ முகாம்களில் பயிற்சி அளிக்கப்படும். இலங்கைக் காவல்துறையினருக்கு இந்தியாவில் உள்ள பயிற்சி மையங்களில் நவீன பயிற்சிகள் அளிக்கப்படும்.
அதாவது இராணுவ ரீதியில் இந்தியாவும் இலங்கையும் இணைந்து செயல்படும் என்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. இலங்கையில் விடுதலைப் புலிகளை முழுவதுமாக ஒழித்துவிட்டதாக இராசபக்சே அறிவித்திருக்கிறார். இலங்கைக்கு அருகே வேறு பகைநாடுகள் எதுவும் கிடையாது. இந்தச் சூழ்நிலையில் இலங்கை இராணுவத்திற்கு நவீன பயிற்சிகள் அளித்து பலப்படுத்த வேண்டிய அவசியம் என்ன? இது நாளைக்கு இந்தியாவுக்கு எதிராகத் திரும்பாது என்பதற்கு உறுதி என்ன?
திரிகோணமலையில் சம்பூர் என்ற இடத்தில் 500 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்தை இந்தியா அமைத்துக்கொடுக்க ஒப்புக்கொண்டிருக்கிறது.
சம்பூர் வெட்டவெளியோ அல்லது தரிசு நிலமோ அல்ல. சம்பூர் அடர்த்தியாக தமிழர்கள் தொன்றுதொட்டு வாழ்ந்த ஊர். ஊரைச் சுற்றிலும் விவசாய நிலங்கள் உண்டு. ஆனால் திரிகோணமலைக்கு அருகே உள்ள எந்த ஊரிலும் தமிழர்களை வாழவிடாமல் விரட்டியடிப்பதின் மூலமே திரிகோணமலையை முழுமையாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியும் என சிங்கள அரசு கருதுகிறது. அதற்குத் துணைபுரியும் வகையில் சம்பூரில் வாழும் பல்லாயிரக்கணக்கானத் தமிழர்களை விரட்டியடித்துவிட்டு அங்கு அனல் மின்நிலையம் அமைக்க இந்தியா உதவுவது என்பது தமிழர்களுக்கு செய்யப்படும் துரோகமாகும்.
இலங்கையின் வடமாநிலத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தையும், பலாலி விமான நிலையத்தையும் நவீன மயமாக்கி மேம்படுத்த இந்தியா உதவ முன்வந்துள்ளது.
காங்கேசன்துறை துறைமுகமும் பலாலி விமான நிலையமும் திருத்தி அமைக்கப்படுவதின் மூலம் சிங்களப் படைகள் விரைவில் தமிழர் பகுதிகளில் வந்து இறங்கி அவர்களைத் தாக்க முடியும். அதற்கு இந்திய அரசு உதவியுள்ளது.
தூத்துக்குடி-கொழும்பு, தலைமன்னார்-இராமேசுவரம் ஆகியவற்றுக்கிடையே மீண்டும் கப்பல் போக்குவரத்துத் தொடங்கப்படும் என உடன்பாடு கூறுகிறது.
தமிழ்நாட்டில் அகதிகள் முகாம்களிலும் வெளியில் தங்கள் சொந்த செலவில் தங்கியுள்ள மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை இலங்கையில் போர் முடிந்துவிட்டது. இனிமேல் நீங்கள் தங்கியிருக்கத் தேவையில்லை எனக்கூறி விரட்டியடிக்கவே இந்தத் திட்டம் உதவும். மேலும் இந்திய முதலாளிகள் இலங்கையில் தொடங்கியுள்ள தொழிற்சாலைகளுக்குத் தேவையான கச்சாப் பொருட்களை கொண்டுசெல்ல இத்திட்டம் பயன்படும். இப்போதுள்ள சூழ்நிலையில் இரு நாடுகளையும் சேர்ந்த தமிழர்கள் பயணம் செய்யப்போவதில்லை.
2008ஆம் ஆண்டு இந்தியா-இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையே மீன்பிடித் தொழிலாளர்கள் தொடர்பாக ஏற்பட்ட உடன்பாடு மேலும் பலப்படுத்தப்படும். இதன் மூலம் மீனவர்களின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த உடன்பாடு செய்துகொள்ளப்பட்ட கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழ்நாட்டு மீனவர்கள் தொடர்ந்து சிங்களக் கடற்படையால் வேட்டையாடப்பட்டு வருகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இராசபக்சே தில்லியில் இருக்கும்போதே இராமேசுவரம் மீனவர்களை சிங்களக் கடற்படை மிகக்கடுமையாகத் தாக்கியுள்ள செய்தி வெளியாகியுள்ளது.
மொத்தத்தில் இந்த உடன்பாடுகள் சிங்கள அரசுக்குச் சாதகமானவையே தவிர ஈழத்தமிழர்களுக்கு முற்றிலும் எதிரானவையே ஆகும். போர் முடிந்த பிறகு 15-10-09இல் தமிழக முதல்வரால் அனுப்பிவைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இராசபக்சேயைச் சந்தித்தபோது இன்னும் 15 நாட்களில் முள்வேலி முகாம்களில் உள்ள மக்கள் சிறிதுசிறிதாக விடுவிக்கப்பட்டு அவர்கள் ஊர்களுக்கு அனுப்பப்படுவார்கள். மூன்று மாதத்திற்குள் அனைவருமே விடுவிக்கப்படுவார்கள் என வாக்குறுதி அளித்தார் என முதல்வர் கருணாநிதியே அறிக்கை வெளியிட்டார். ஆனால் கிட்டத்தட்ட 9 மாதங்கள் கடந்த பிறகும் முகாம்களில் உள்ள மக்களில் பெரும்பாலோர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. விடுவிக்கப்பட்டவர்களும் அவர்கள் ஊர்களுக்குத் திரும்ப முடியவில்லை. நடுவழியில் உள்ள முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இலங்கைத் தமிழர் பகுதிகளில் கிட்டத்தட்ட 2,60,000 தமிழர் வீடுகள் குண்டுவீச்சுகளினால் முழுமையாக அழிந்துவிட்டன. ஏறத்தாழ 10 இலட்சம் மக்கள் வீடுகளை இழந்து சாலையோரங்களிலும் மரத்தடிகளிலும் வாழ்ந்து வருகிறார்கள்.
இப்போது டில்லியில் இராசபக்சேயைத் சந்தித்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் மூன்று மாதத்தில் பிரச்சினை தீரும் என வாக்குறுதி வழங்கியிருக்கிறார். இக்குழுவின் தலைவராகச் சென்ற முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு இராசபக்சேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தங்களுக்குத் திருப்தி ஏற்படவில்லையென்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு முன் கொழும்பில் தனது மாளிகைக்கு சூன் 7ஆம் தேதியன்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து இராசபக்சே பேசியிருக்கிறார். அதன்பின் அக்குழுவில் ஒருவராகச் சென்ற சுரேசு பிரேமசந்திரன் பின்வருமாறு கூறியிருக்கிறார்:
'போர்க் காரணமாக அழிக்கப்பட்ட தமிழர் வீடுகளைக் கட்டித்தரவேண்டுமென இராசபக்சேவிடம் நாங்கள் வேண்டியபோது. இலங்கை அரசிடம் அதற்கான நிதி வசதியில்லை என்று கைவிரித்துவிட்டார். இடம்பெயர்ந்த தமிழர்களை அவர்கள் சொந்த இடங்களில் குடியேற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டபோது அதற்கான நிதிவசதி இல்லையென்று வெளிப்படையாகவே இராசபக்சே தெரிவித்தார். இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது குறித்து அவரிடம் பேசமுற்பட்டபோது 'சிங்கள மக்கள் தனக்கு வழங்கிய ஆணைப்படிதான் தன்னால் எதையும் செய்யமுடியும். உங்கள் கோரிக்கைகளைக் கேட்பதற்கு தயாராக இல்லை, என இராசபக்சே மிகக்கண்டிப்புடன் கூறினார். அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவது தொடர்பாக கேட்டபோதும் மறுத்துவிட்டார். மக்கள் குடியிருப்புப் பகுதிகளை அதிஉயர் பாதுகாப்பு வலையங்களாக அறிவித்து இராணுவம் கைப்பற்றியதை மீண்டும் மக்களிடம் அளிக்கவேண்டும் என்று கேட்ட கோரிக்கையையும் அவர் ஏற்கவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்படவேண்டும் என நாங்கள் கேட்டபோது இலங்கை சிங்கள நாடு. எங்கு வேண்டுமானாலும் குடியேற சிங்களர்களுக்கு உரிமை உண்டு என்றும் இறுமாப்புடன் கூறினார்.' எனத் தெரிவித்திருக்கிறார்.
தில்லி வந்துள்ள இராசபக்சேயின் தூதுக்குழுவில் டக்ளஸ் தேவானந்தா கிழக்கு மாநில முதலமைச்சர் பிள்ளையான் ஆகியோரும் வந்துள்ளார்கள். டக்ளஸ் தேவானந்தா மீது கொலைக் குற்றம் உட்பட மூன்று வழக்குகள் சென்னை நீதிமன்றங்களில் கடந்த 24 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ளன. கடந்த 2006ஆம் ஆண்டு சூன் 19ஆம் தேதியன்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து கொலைக் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா வெளியுறவுத் துறை அதிகாரிகளைச் சந்தித்துப் பேசவும், தில்லியில் செய்தியாளர்களைச் சந்திக்கவும் அனுமதிக்கப்பட்டது எப்படி என்று கேட்டபோது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் வாக்குறுதி அளித்தார். ஆனால் இதற்குப் பின் மூன்று வாரங்கழித்து கியூபா தலைநகரான ஹவானாவில் நடைபெற்ற சர்வதேச மாநாட்டிற்கு வந்த இராசபக்சே தன்னுடன் டக்ளஸ் தேவானந்தாவையும் அழைத்துகொண்டுவந்து மன்மோகன் சிங்கை அறிமுகம் செய்துவைத்த படம் இந்தியப் பத்திரிகைகளில் வெளியானது. எனவே டக்ளஸ் தேவானந்தா குறித்து விவரம் எதுவும் இந்தியப் பிரதமருக்குத் தெரியாது என கூற முடியாது. இந்தப் பிரச்சினையில் தமிழகக் காவல்துறையை தன்வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் கருணாநிதியும் வாய்மூடி மெளனம் சாதிப்பதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழ்நாட்டுத் தமிழன் ஒருவரை கொலை செய்த ஒரு குற்றவாளி மீது உள்ள வழக்கில் 24 ஆண்டுகாலமாக தமிழக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தூங்கிக்கிடக்கிறது. கிழக்கு மாநிலத்தைப் பிரித்தது சரியே என இந்தியாவிடம் தெரிவிக்க பிள்ளையான் அழைத்துவரப்பட்டுள்ளார்.
நான் உமி கொண்டு வருகிறேன். நீ அவல் கொண்டு வா இருவரும் ஊதி ஊதி தின்போம் என்ற பழமொழிக்கேற்ப இராசபக்சே - மன்மோகன் உடன்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டினால் இலங்கைக்கு ஆதாயமே தவிர, இந்தியாவுக்கு எதுவும் இல்லை. ஈழத்தமிழர்களை தொடர்ந்து வேட்டையாட இராசபக்சே இந்திய அரசினால் ஊக்குவிக்கப்பட்டிருக்கிறார். இதைத் தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.