குடியரசுத் தலைவர் கோவை வருவதற்கு முன், நீதிமன்ற மொழியாக தமிழை ஆக்கும் சட்டத்தில் கையெழுத்திடவேண்டும் - இல்லையேல் மக்கள் போராட்டம் வெடிக்கும் - பழ. நெடுமாறன் அறிக்கை |
|
|
|
வெள்ளிக்கிழமை, 18 ஜூன் 2010 20:28 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : இன்று காலை 11 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் உண்ணா நோன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் வழக்கறிஞர்களை பழ. நெடுமாறன் சந்தித்து அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதற்கு பின் அவர் பின்வரும் அறிக்கையை பத்திரிகைகளுக்கு வெளியிட்டார்:
உயர்நீதிமன்றத்தில், தமிழ் நீதிமன்ற மொழியாக உடனடியாக ஆக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, மதுரையில் கடந்த 10 நாட்களாக வழக்கறிஞர்கள் நடத்திவரும் சாகும்வரையிலான உண்ணா நோன்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னை வழக்கறிஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். 2006ஆம் ஆண்டில் தமிழக சட்டமன்றத்தில் இதற்கானத் தீர்மானம் அனைத்துக்கட்சி ஆதரவுடன் ஒரேமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் கடந்த நான்காண்டு காலமாக இதில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு ஒப்புதல் அளிக்கவில்லை. மத்திய அரசில் தி.மு.க.வும் ஓர் அங்கம். தி.மு.க. அமைச்சர்களும் இதுகுறித்து குடியரசுத் தலைவரைச் சந்தித்து வற்புறுத்தவில்லை. ஆனால் கோவையில் நடைபெறவிருக்கும் உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாட்டினைத் தொடக்கி வைக்க குடியரசுத் தலைவர் அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் இந்த மாநாட்டிற்கு வருவதற்கு முன்பாக உயர்நீதிமன்றத்தில் தமிழை நீதிமன்ற மொழியாக ஆக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துவிட்டு வரவேண்டும். இல்லையேல் வழக்கறிஞர்களின் போராட்டம் மக்கள் போராட்டமாக வெடிக்கும் என எச்சரிக்கிறேன். |