ஈழத்தமிழர் ஆதரவாளர்களுக்கு எதிராகப் புதிய சட்டம்! - அமைச்சர் துரை.முருகன் மிரட்டலுக்கு பழ.நெடுமாறன் கண்டனம் |
|
|
|
திங்கட்கிழமை, 12 ஜூலை 2010 20:47 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: வெளிநாட்டுப் பிரச்சினையை மையமாக வைத்து மத்திய-மாநில அரசுகளுக்கு எதிராகவும் தேச ஒற்றுமைக்கு எதிராகவும் பேசுபவர்களை தண்டிக்க இப்போதுள்ள சட்டங்கள் போதாது என்றால், புதிய சட்டம் கொண்டுவர அரசு தயங்காது என சட்டத்துறை அமைச்சர் துரை.முருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வரலாறு தெரியாமலும், இருக்கும் மக்கள் உரிமைப் பற்றிய சட்டங்களைப் பற்றிப் புரிந்துகொள்ளாமலும் சட்ட அமைச்சர் பேசுவது நகைப்பிற்குரியதாகும். கடந்த காலத்தில் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம், தென்னாப்பிரிக்க நிறவெறி அரசுக்கு எதிரானப் போராட்டம், வியட்நாம் விடுதலைப் போராட்டம் போன்ற பல்வேறு வெளிநாட்டுப் பிரச்சினைகளுக்கு ஆதரவாக இந்தியாவில் காங்கிரஸ், தி.மு.க. உட்பட பல்வேறு கட்சிகள் குரல்கொடுத்துள்ளன. தொடர்ந்து போராடியுள்ளன. ஆனால் இப்போது திடீரென தேசப் பக்த வேடத்தை துரை.முருகன் பூண்டு வெளிநாட்டுப் பிரச்சினைகளைப் பற்றி யாரும் பேசக்கூடாது என மிரட்டிப் பார்க்கிறார். ஈழத்தமிழர் பிரச்சினையில் இந்திய-தமிழக அரசுகள் செய்த துரோகத்தைக் குறிப்பிடாமல் யாரும் பேசமுடியாது. அவ்வாறு பேசுபவர்களை ஒடுக்குவதற்குப் புதிய சட்டம் கொண்டுவரப்படும் எனக் கூறும் துரை.முருகனுக்கு, கடந்த காலத்தில் தடா, பொடா போன்ற கொடிய சட்டங்களுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து போராடியதின் விளைவாக இச்சட்டங்கள் திரும்பப் பெறப்பட்டன என்பதையும் நினைவுபடுத்துகிறேன். ஏற்கனவே தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவை பறிக்கப்படுகின்றன. ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக கூட்டங்கள் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் அச்சிடக்கூடாது என அச்சகங்கள் மிரட்டப்படுகின்றன. ஈழ ஆதரவாளர்கள் மீது அடுக்கடுக்கான பொய் வழக்குகள் போடப்படுகின்றன. அறிவிக்கப்படாத அவசரகால நிலைமை நிலவுகிறது. இந்த ஒடுக்குமுறை போதாது என்று மேலும் எத்தனை புதிய அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவந்தாலும் தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் திரண்டெழுந்துவரும் எழுச்சியை அடக்கமுடியாது என்பதை அவரும் அவரை ஏவிவிட்டுள்ள முதலமைச்சர் கருணாநிதியும் உணரவேண்டும். உணரத் தவறினால் ஏற்படும் மக்கள் கொந்தளிப்புகளுக்கு அவர்களே பொறுப்பாவார்கள் என எச்சரிக்கிறேன். |