தமிழ்நாட்டில் சீனத் தொழிற்சாலையா? - பழ. நெடுமாறன் கண்டன அறிக்கை |
|
|
|
வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2010 21:05 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : சீன தொலைத்தொடர்பு நிறுவனமான ஹுவாய் சென்னை அருகே 2300 கோடி ரூபாய் முதலீட்டில் தொலைத்தொடர்பு சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை அமைப்பதற்கான உடன்பாட்டில் தமிழக துணை முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திட்டிருக்கிறார்.
ஏற்கனவே தமிழ்நாடு பன்னாட்டு தொழில் முதலாளிகளின் வேட்டைக்காடாக மாற்றப்பட்டு வருகிறது. இப்போது முதன்முறையாக தமிழ்நாட்டில் தொழில் தொடங்க சீனாவும் அனுமதிக்கப்படுவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதற்கு சிங்கள அரசுக்கு சீனா பெருந்துணை புரிந்தது. அதுமட்டுமல்ல இராசபக்சேயின் போர்க்குற்றங்களை மறைப்பதற்கும் ஐ.நா.விலும் மற்றும் சர்வதேச அமைப்புகளிலும் சீனா தொடர்ந்து உதவி புரிந்து வருகிறது. இந்த நிலைமையில் தமிழ்நாட்டிலேயே சீனத் தொழிற்சாலை அமைப்பதற்குக் கதவைத் திறந்துவிடுவது தொலைநோக்குப் பார்வையற்றதாகும். கொழும்புவில் சீனாவின் வணிக நிலையங்களை நிறுத்துவதற்கு எதிராக சிங்கள மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் அதற்கு எதிர் மாறாக சீனருக்கு இரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்பது மன்னிக்க முடியாத செயலாகும். இது உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்துகிறேன். |