கோயில், மசூதி ஆகியவற்றை மத்தியஅரசே கட்ட வேண்டும்! |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 அக்டோபர் 2010 21:06 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை மூன்று சமபாகங்களாகப் பிரித்து இந்து மகாசபை, நிர்மோகி அகாடா, சன்னி வஃக்ப் வாரியம் ஆகியவற்றுக்கு வழங்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சுமார் 60 ஆண்டுகாலத்திற்கு மேலாக நடைபெற்று வந்த வழக்கில் அளிக்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு எதிர்காலத்தில் மத சச்சரவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.
ஆனால் இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்லப்போவதாக ஒருதரப்பு அறிவித்துள்ளது. எனவே இப்பிரச்சினை மேலும் சில காலத்திற்கு நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இதைத் தவிர்க்க வேண்டுமானால் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தன்னையும் இந்த வழக்கில் ஈடுபடுத்திக்கொள்ளும் வகையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்ய வேண்டும். ஏற்கனவே இப்பகுதியில் உள்ள 67 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கையகப்படுத்தியுள்ளது. மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு மூன்று அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட இருக்கிற நிலத்தையும் உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் மத்திய அரசே கையகப்படுத்திக் கொள்ளவேண்டும். இராமர் கோயிலையும், பாபர் மசூதியையும் எழுப்பும் பணியை மேற்கொள்வதற்காக. இரு மதங்களையும் சேர்ந்த முன்னாள் நீதியரசர்கள், மதப் பெரியவர்கள் ஆகியோரைக் கொண்ட இரு அறங்காவலர்கள் குழுக்களை மத்திய அரசு அமைக்க வேண்டும். அமைப்பதற்கு முன் இருமதங்களையும் சேர்ந்த பெரியவர்களின் ஆலோசனைகளையும் ஒப்புதலையும் பெறவேண்டும். மத்திய அரசினால் அனைவரின் ஒப்புதலோடு அமைக்கப்படும் அறங்காவலர்கள் குழுக்கள் இந்த இரு வழிபடு தலங்களைக் கட்டினால், புதிய சர்ச்சைகள் கிளம்பாமல் இருக்கும். இதற்கு வழக்கில் சம்பந்தப்பட்ட அமைப்புகளும் மற்றும் சகல அரசியல் கட்சிகளும் முழுமையான ஒத்துழைப்பு நல்கி மத நல்லிணக்கத்துக்கு உறுதுணையாக நிற்கவேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். |