காவிரியில் தண்ணீர் விட மறுப்பு கருநாடகத்தின் அடாவடிப்போக்குக்கு பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
வியாழக்கிழமை, 28 அக்டோபர் 2010 21:15 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : தமிழ்நாட்டில் காவிரிச் சமவெளிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சம்பாப் பயிர்கள் போதுமான தண்ணீர் கிடைக்காததால் வாடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காவிரி அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக முதல்வர் கருணாநிதி கருநாடக முதல்வருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளை கருநாடக அனைத்துக்கட்சிக் கூட்டம் ஏற்க மறுத்திருக்கிறது.
கருநாடகத்தில் ஆளுங்கட்சியான பா.ஜ.க., எதிர்க்கட்சியான காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா கட்சி உள்பட அனைத்துக் கட்சிகளும் இணைந்து தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுத்துள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். காவிரியில் தண்ணீர்ப் பற்றாக்குறை நிலவும் காலங்களில் இருக்கும் தண்ணீரை இரு மாநிலங்களும் எவ்வாறு பங்கிட்டுக்கொள்ளவேண்டும் என்பது குறித்து நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பிலும், இறுதித் தீர்ப்பிலும் தெளிவாக வரையறுத்துக் கூறப்பட்டுள்ளது. ஆனால் தன்னுடைய தேவைக்குப் போக எஞ்சிய நீரைத்தான் தமிழகத்திற்கு வழங்க முடியும் என்று கூறியுள்ளது. இதன் விளைவாக தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்படும் அரிசி உற்பத்தி பெருமளவு பாதிக்கப்படும் என்பதையும் தமிழக முதல்வர் உணர்ந்து உடனடியாக பிரதமரைச் சந்தித்துத் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டணிக் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் கட்சி கருநாடகத்தில் தமிழகத்திற்கு எதிரான நிலை எடுத்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கத் தமிழக முதல்வர் தயங்குவது ஏன்? கருநாடகத்தின் அடாவடித்தனத்தின் விளைவாக இந்திய ஒருமைப்பாடு என்பது உடைந்து சிதறும் அபாயம் உருவாகும் உள்ளது என எச்சரிக்கிறேன். |