தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் - பழ நெடுமாறன் கண்டனம் |
|
|
|
சனிக்கிழமை, 27 நவம்பர் 2010 21:23 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் தமிழர்களை அவரவர் வீடுகளில் மீள்குடியேற்றம் செய்வதும் இனப்பிரச்சினைக்குப் படிப்படியாகத் தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தை நடத்துவதுமே, போர்ப் பிற்காலத்தில் முக்கிமான பிரச்சினையாகும். அதை சிங்கள அரசு செய்யும் என நம்புவதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா கூறியிருக்கிறார்.
இந்திய#இலங்கை கூட்டுக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொண்டு பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போதே இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதே கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரான ஜி.எல். பெய்ரிஸ் அவர் கூற்றை மறுக்கும் வகையில், "போரால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதும் மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளைத் தீர்ப்பதையுமே சிங்கள அரசு முக்கியமாக கருதுகிறது' என்று கூறியிருக்கிறார். போரினால் பாதிக்கப்பட்டத் தமிழ் அகதிகளை மீள்குடியேற்றம் செய்வது விரைவாக நடைபெறவில்லை எனத் தமிழக முதலமைச்சர் குற்றம் சாட்டியிருப்பதைக் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது கிருஷ்ணா பின்வருமாறு கூறியிருக்கிறார்: "முதலமைச்சரின் கவலை நியாயமானதுதான் ஆனால் இலங்கை அரசாங்கத்திற்கு உள்ள சிரமங்களையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என நழுவியிருக்கிறார். உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ள பல இலட்சம் தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் பள்ளிக்கூடங்களிலும், கோயில்களிலும் தெருவோர மரத்தடியிலும் இன்னமும் சொல்லொண்ணாத் துன்பங்களுக்கு ஆளாகி வாடிவருவதைக் குறித்து கிருஷ்ணா கொஞ்சமும் கவலைக்கொள்ளவில்லை. தமிழர் பகுதிகளில் வேகவேகமாக சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறுவதையும் தங்கள் வீடுகளிலிருந்தும் நிலங்களிலிருந்தும் தமிழர்கள் விரட்டியடிக்கப்படும் கொடுமையைத் தடுத்து நிறுத்துவது குறித்தும் சிங்கள அரசிடம் எதுவும் பேச கிருஷ்ணா முன்வரவில்லை. தமிழர் பகுதிகளில் வாழும் மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லமுடியாதபடி தடுக்கப்பட்டுவிட்டது குறித்தும் அதே வேளையில் தமிழர் கடல் பகுதி சிங்கள மீனவர்கள் படைபடையாகப் புகுந்து மீன்பிடிப்பது குறித்தும் கிருஷ்ணா கொஞ்சமும் கவலைப்படவில்லை. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பொருளாதாரப் பங்களிப்பு உடன்பாடு செய்வது குறித்து மட்டுமே சிங்கள அரசுடன் எஸ்.எம். கிருஷ்ணா பேசியுள்ளார். ஏற்கனவே இத்தகைய உறவு குறித்து இந்தியா தயாரித்தத் திட்டத்தை இலங்கை அமைச்சரவை ஏற்க மறுத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். காவிரி படுகை மற்றும் மன்னார் கடல்பகுதியில் எண்ணெய் எடுப்பதற்கு இந்திய நிறுவனங்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என இலங்கை ஒப்புக்கொண்டுள்ளது. திரிகோணமலை மாவட்டத்தில் சம்பூரில் 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் திறனுள்ள அனல் மின் நிலையம் ஒன்றை இந்தியா அமைத்துத் தர ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான உடன்பாடு விரைவில் கையெழுத்திடப்படும். வட இலங்கையில் உள்ள இரயில்வேத் திட்டங்களுக்கு இந்தியா சுமார் 2000 கோடி ரூபாய்கள் நிதியுதவி அளிக்க ஒப்புக்கொண்டுள்ளது. இலங்கையில் துன்பத்திற்கு ஆளாகித் தவிக்கும் தமிழர்களின் நிலை குறித்து கொஞ்சமும் கவலைப்படாமல் அதே வேளையில் இலங்கைக்கு எவ்வித நிபந்தனையுமில்லாமல் பொருளாதார உதவிகளை இந்தியா வாரி வாரி வழங்கி வருகிறது. இதன் மூலம் சீனாவின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையை மீட்டுவிடமுடியும் என இந்தியா நம்புகிறது. இதற்காகவே எஸ்.எம். கிருஷ்ணா இலங்கைக்கு அனுப்பப்பட்டார் என்பதும் அம்பலமாகியிருக்கிறது. இந்திய அரசின் இந்த அப்பட்டமான தமிழர் விரோதப் போக்கை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என எச்சரிக்கிறேன். |