கொல்லைப்புற வழியில் மேலவையில் நுழையத் திட்டம் - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 28 ஜனவரி 2011 17:20

மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :

சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரோசி கூறியிருக்கிறார். சட்டமன்றப் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டாலும் மேலவைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் தற்போது உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களே மேலவைத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

தமிழக சட்ட மேலவையில் மொத்தம் உள்ள 78 உறுப்பினர்களில் சட்டமன்ற பேரவை உறுப்பினர்களின் மூலம் 26 பேரும் உள்ளாட்சிப் பேராளர்களின் மூலம் 26 பேர்களும் தேர்வு செய்யப்படுவார்கள். 12 பேரை ஆளுநர் நியமிப்பார். மீதமுள்ள 14 பேரில் பட்டதாரி தொகுதிகளிலிருந்து 7 பேரும் ஆசிரியர் தொகுதியிலிருந்து
7 பேரும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அதாவது இன்னும் சில மாதங்கள் மட்டுமே நீடிக்க இருக்கிற தற்போதைய சட்டமன்றப் பேரவையின் மூலம் 26 பேரும், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. எனவே தற்போதைய உள்ளாட்சி மன்றங்களின் பதவிக்காலம் விரைவில் முடிய இருக்கிறது. அவைகளிலிருந்து 26 பேரும், தற்போதைய தி.மு.க. அமைச்சரவை பரிந்துரை செய்யும் 12 பேர் ஆளுநர் நியமனத்தின் மூலமும் மேலவையில் நுழைய வழிவகுக்கப்படுகிறது. ஆக மொத்தமுள்ள 78 உறுப்பினர்களில் மிகப்பெரும்பாலோரை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட வழிவகுக்கவே அவசரக்கோலத்தில் சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய சட்டமன்றம் அமைக்கப்பட்டப் பிறகும் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டப் பிறகும் சட்டமன்ற மேலவைத் தேர்தல் நடத்தப்படுவதுதான் சரியாக இருக்க முடியும். ஆனால் வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் கொல்லைப் புற வழியில் மேலவையில் புகுந்துகொள்ள நினைக்கிற தலைவர்கள் தீட்டியுள்ள இந்தச் சதித்திட்டத்தை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சனநாயக மரபுகளுக்கும் தார்மீக நெறிமுறைகளுக்கும் இது எதிரானது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.