பார்வதி அம்மையாரின் தகனம் நடைபெற்ற சிதையை இழிவுபடுத்திய சிங்களரைக் கண்டித்து இலங்கைத் துணைத் தூதுவர் அலுவலகத்தை மூடும் போராட்டம் - தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011 17:34
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
பார்வதி அம்மையாரின் உடல் தகனக்கிரியை நடைபெற்ற இடத்தில் நேற்றிரவில் சிங்கள இராணுவம் புகுந்து சிதையை அலங்கோலப்படுத்தியும், மூன்று நாய்களை சுட்டுக்கொன்று வந்து அந்த சிதையில் வைத்தும் இழிவான செயலில் ஈடுபட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
பகைவர்களாயினும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவது நாகரிக மக்களின் கடமையாகும். ஆனால் இலங்கையில் சிங்கள இராணுவ வெறியர்கள் மாவீரர்களின் நினைவிடங்களை இடித்துத் தள்ளி அட்டூழியம் புரிந்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் உச்சக்கட்டமாக வீரத்தாய் பார்வதி அம்மையாரின் தகனம் நடைபெற்ற சிதையை இழிவுபடுத்தியிருக்கிறார்கள். மனிதநேயமும் நாகரீகமும் அற்ற இந்த இழிசெயலைக் கண்டிக்கும் வகையில் சென்னையில் மயிலை டி.டி.கே. சாலையில் உள்ள சிங்கள துணைத் தூதரகத்தை உடனே அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து 26-02-2011 அன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடைபெறும்.
மயிலை-லஸ் சாலையில் உள்ள நாகேசுவரராவ் பூங்கா அருகே அணிவகுத்து அங்கிருந்து ஊர்வலமாக சிங்கள துணைத் தூதரக அலுவகத்துக்கு செல்ல திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. எனவே இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் அங்கம் வகிக்கும் அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகள் உணர்வாளர்கள் ஆகிய அனைவரும் பெருந்திரளாக கலந்துகொள்ளும்படி வேண்டிக்கொள்கிறேன். பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன், புதிய பார்வை ஆசிரியர் ம. நடராசன், உள்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.