இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் சிங்கள இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டது குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. விசாரணைக் குழு இராசபக்சே ஆட்சி மீது கீழ்க்கண்ட மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளது.
1. சர்வதேச மனித நலச் சட்டம், மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றை இலங்கை இராணுவம் அப்பட்டமாக மீறியுள்ளது. 2. போர்க் குற்றங்கள் வரையறைக்குள் வரக்கூடிய கொடிய குற்றங்களை சிங்கள இராணுவம் புரிந்துள்ளது. 3. அரசு அறிவித்த பாதுகாப்பு வளையப் பகுதிகளில் தஞ்சம் புகுந்த மக்கள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 4. வன்னியில் இருந்த அனைத்து மருத்துவமனைகள் மீதும் தாக்குதல் நடத்தி ஏராளமான நோயாளிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். 5. போர் முடிந்த பிறகு மக்களை சித்திரவதை முகாம்களில் அடைத்து படுகொலை, பாலியல் வன்முறை ஆகியவற்றை நடத்தியிருக்கிறார்கள். 6. செஞ்சிலுவைச் சங்க கப்பல் நிற்பது தெரிந்தும் அந்தக் கடற்கரை மீது கடுந் தாக்குதால் நடத்தப்பட்டுள்ளது. 7. அரசுக்கு எதிரான ஊடகவியலாளர்களும், சமூக ஆர்வலர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஐ.நா. விசாரணைக் குழு திட்டவட்டமாகவும் தெளிவாகவும் இராசபக்சே கும்பல் அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் போர்க்குற்றங்களையும் புரிந்திருக்கிறது என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டது. 2010ஆம் ஆண்டின் சனவரியில் டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் இராசபக்சே கும்பல் போர்க் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து சர்வதேச நீதிமன்றம் அவர்களை விசாரிக்க வேண்டும் என்று கூறியது. இப்போது ஐ.நா.வும் மேற்கு நாடுகளும் இராசபக்சே கும்பலை போர்க் குற்றவாளிகள் என சுட்டிக் காட்டிய பிறகாவது இந்திய அரசு முன்வந்து பகிரங்கமாக இராசபக்சே கும்பலை கண்டித்திருக்க வேண்டும். ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இராசபக்சே மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டிலிருந்து அவரை காப்பாற்றியதன் மூலம் அவருடைய கொடுஞ் செயல்களை மூடி மறைக்க இந்தியா துணை நின்றது. ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி சிங்கள இராணுவம் படுகொலை செய்ய ஆயுத உதவி உட்பட சகல உதவிகளையும் இந்தியா செய்ததினால் இராசபக்சேயின் அட்டூழியங்களை மூடி மறைக்க முயன்றது. ஆனால் இப்போது உலக அரங்கில் இராசபக்சே போர்க் குற்றவாளி என்பது அம்பலமான நிலையில் இனிமேலாவது இந்திய அரசு தன்னுடைய கடந்த காலத் தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்பதுடன் ஐ.நா.வுடன் இணைந்து நின்று இராசபக்சே கும்பலை சர்வதேச நீதி மன்றத்தில் நிறுத்துவதற்கு முன் வரவேண்டும் என்றக் கோரிக்கையைத் தமிழர்கள் ஒன்று திரண்டு வலியுறுத்த வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். |