இராசபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துக! - சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் |
|
|
|
புதன்கிழமை, 20 ஏப்ரல் 2011 17:48 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: 2010ஆம் ஆண்டு சனவரியில் டப்ளினில் கூடிய மக்கள் தீர்ப்பாயம் இராசபக்சே கும்பல் போர்க் குற்றவாளிகள் என தீர்ப்பளித்து சர்வதேச நீதிமன்றம் அவர்களை விசாரிக்க வேண்டுமென்று கூறியது.
இப்போது ஐ.நா. அமைத்த விசாரணைக் குழுவும் இராசபக்சே அரசு போர்க் குற்றங்கள் புரிந்திருப்பதாகவும் சர்வதேச மனித நலச் சட்டம், மனித உரிமைச் சட்டம் ஆகியவற்றை அப்பட்டமாக மீறியிருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த காலத்தில் இராசபக்சே அரசு தமிழர்களுக்கு எதிராக மேற்கொண்ட அட்டூழியங்களை மூடி மறைக்க இந்திய அரசு உதவி செய்தது. ஆனால் இப்போது உலக அரங்கில் இராசபக்சே போர்க் குற்றவாளி என்பது அம்பலமான நிலையில் இந்திய அரசு தன்னுடைய கடந்த கால தவறுகளுக்கு மன்னிப்புக் கேட்பதுடன் ஐ.நா.வுடன் இணைந்து நின்று இராசபக்சே கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முன்வரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவதற்காக 25-04-11 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு சைதாப்பேட்டை - பனகல் மாளிகைக்கு முன் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில்அங்கம் வகிக்கும் அமைப்புகளும் மற்றும் பல தோழமை அமைப்புகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கின்றன. தமிழர்கள் அனைவரும் திரண்டு வருமாறு வேண்டிக்கொள்கிறேன். |