ஐ.நா. எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க தமிழர்கள் கட்டாயப்படுத்துவதை கண்டிக்கிறேன்! |
|
|
|
திங்கட்கிழமை, 02 மே 2011 18:19 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இராசபக்சேயின் போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பில் மே முதல் தேதியன்று நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென தமிழர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.
சிங்களச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களும் சிறையில் இருப்பவர்களின் குடும்பத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளத் தவறினால் மீண்டும் சிறையில் அடைக்கப் படுவார்கள் என இராணுவத்தினால் மிரட்டப்பட்டுள்ளனர். இதன் விளைவாக கிளிநொச்சிப் பகுதியிலிருந்து 20க்கு மேற்பட்ட பேருந்துகளில் தமிழர்கள் கொழும்புக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன. அதைப் போல யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா. மற்றும் தொண்டு நிறுவனங்களின் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கொழும்புவிலிருந்து சிங்களக் காடையர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இராசக்சேயின் இந்த முயற்சிகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். சிறைகளிலிருந்து விடுவிக்கப் பட்டப் பிறகும் தமிழர்கள் இன்னமும் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. இந்தக் கொடிய சூழ்நிலையிலிருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு ஐ.நா. பேரவை விரைந்து செயல்பட வேண்டுமென வேண்டிக் கொள்கிறேன். |