ஜெயலலிதாவிற்கு புலிகள் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டார்கள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 25 மே 2011 18:24
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியை கொலை செய்ய பிரபாகரன் தான் திட்டம் தீட்டினார் என விடுதலைப் புலிகளின் தலைவராக தனக்குத் தானே மகுடம் சூட்டிக் கொண்ட குமரன் பத்மநாபன் கூறி இருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பல ஆண்டுகளுக்கு முன்னாள் நீக்கி வைக்கப்பட்டவருக்கு புலிகளின் சார்பில் பேசுவதற்கு எத்தகைய உரிமையும் கிடையாது. அதிலும் தற்போது அவர் சிங்கள அரசின் கைப்பாவையாக மாறி உலகெங்கும் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை அடையாளம் காட்டும் துரோகப் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும்.
இராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட உடனேயே விடுதலைப் புலிகளின் சர்வதேச செயலகத்தின் பொறுப்பாளராக இருந்த தளபதி கிட்டு இக்கொலைக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென்றும் இக்கொலை சம்பந்தமான சில உண்மைகள் தங்களுக்குத் தெரியும் என்றும் இந்திய புலனாய்வுத் துறை அணுகினால் அவர்களுக்கு அவற்றைத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகவும் பகிரங்கமாக அறிவித்தார். ஆனால் இந்திய புலனாய்வுத் துறை இறுதிவரை அவரைச் சந்தித்து அந்த உண்மைகளைப் பெற முயற்சிக்கவில்லை.
இத்தனை ஆண்டு காலம் கழித்து குமரன் பத்மநாபன் மூலமாக இத்தகையப் பிரச்சாரம் செய்யப்படுவது தமிழக மக்களைக் குழப்புவதற்கு இந்திய உளவுத் துறையும் சிங்கள உளவுத் துறையும் இணைந்து செய்யும் சதியே இப் பொய்ப் பிரச்சாரம் ஆகும்.
ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும் அதற்குத் துணையாக தி.மு.க.வும் செய்த துரோகத்திற்கு தமிழக மக்கள் கடந்த தேர்தலில் சரியான பாடம் கற்பித்திருக்கிறார்கள். எனவே மக்களைக் குழப்பித் திசைத் திருப்ப திட்டமிட்டு குமரன் பத்மநாபன் மூலம் பொய்ப் பிரச்சாரம் செய்யப்படுகிறது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா ஈழத் தமிழர் பிரச்சினையில் அண்மையில் வெளியிட்ட அறிவிப்புகள் தில்லி அரசைக் கலக்கமடைய வைத்துள்ளன. மத்திய அரசின் கொள்கைக்கு எதிரான நிலையை தமிழக முதலமைச்சர் எடுப்பது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என அஞ்சும் தில்லி அரசின் உளவுத்துறை குமரன் பத்மநாபன் மூலமாக ஜெயலலிதாவை படுகொலை செய்ய புலிகள் திட்டம் தீட்டியதாக செய்தியைப் பரப்பியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் விடுதலைப் புலிகளுக்கு செய்த பேருதவிகளை புலிகள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். எம்.ஜி.ஆரைப் பின்பற்றும் ஜெயலலிதாவிற்கோ அல்லது வேறு யாருக்கும் ஒரு போதும் எவ்வித தீங்கும் இழைக்க மாட்டார்கள்.
நாடு கடந்த தமிழீழ அரசு திட்டத்தை குமரன் பத்மநாபனுடன் இணைந்து அறிவித்த உருத்திரகுமரன், இப்போது குமரன் பத்மநாபனின் பொய்ப் பிரச்சாரம் குறித்து தனது நிலையை விளக்க வேண்டும். இல்லையேல் அவரையும் குமரன் பத்மநாபனின் கூட்டாளியாகத்தான் கருதி தமிழர்கள் ஒதுக்குவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.