தொடர்ந்து தமிழர்களை ஏமாற்ற வேண்டாம் பிரதமருக்கு பழ. நெடுமாறன் எச்சரிக்கை |
|
|
|
வியாழக்கிழமை, 30 ஜூன் 2011 18:38 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர்களின் குறைகள் நியாயமானவை. அவைத் தீர்க்கப்பட வேண்டும். அங்கு வாழும் தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என இந்திய அரசு இலங்கை அரசை நிர்பந்தித்து வருகிறது என பிரதமர் மன்மோகன் சிங் கூறியிருக்கிறார்.
ஆனால் நேற்றைய தினம் "இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணுமாறு இந்திய நிர்பந்திக்கவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்தா இராசபக்சே தெரிவித்திருக்கிறார். யார் கூறுவது உண்மை? என்ற ஐயம் எழுந்திருக்கிறது. இராசபக்சே தெரிவித்திருக்கிற கருத்தை இந்தியப் பிரதமர் மறுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இலங்கையில் போர் உச்சக் கட்டமாக நடைபெற்ற வேளையில் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக மக்கள் போராடிய போது போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என இலங்கை அரசுக்குக் கூறியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார். ஆனால் இராசபக்சே அதை மறுத்தார். இந்தியா ஒருபோதும் செய்யும்படி கேட்கவில்லை என பகிரங்கமாகக் கூறினார். அதைப் போல இலங்கைக்கு இராணுவ ரீதியிலான உதவி எதையும் இந்தியா செய்யவில்லை என பிரதமர் மன்மோகன் சிங் கூறினார். ஆனால் இந்தியா செய்த உதவியால்தான் தாங்கள் வெற்றிபெற முடிந்தது என இராசபச்சே போர் முடிந்தபிறகு பகிரங்கமாகக் கூறினார். இவ்வாறு தங்களைத் தொடர்ந்து ஏமாற்றுவதற்காக பிரதமர் மன்மோகன் சிங் நாடகமாடுவதாக தமிழக மக்கள் கருதுகிறார்கள். எனவே தான் கடந்த சட்ட மன்றத் தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் பாடம் கற்பித்தார்கள். இன்னமும் தொடர்ந்து தமிழக மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபடவேண்டாம் என பிரதமர் மன்மோகன் சிங்கை எச்சரிக்கிறேன். |