கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக நவம்பர் 5இல் ஆர்ப்பாட்டம் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
வியாழக்கிழமை, 03 நவம்பர் 2011 19:21 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : அணுமின் உலைக்கு எதிராக கூடங்குளம் மக்கள் தொடர்ந்து நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நவம்பர் 5ஆம் தேதி சனிக்கிழமை அன்று தென் மாவட்டங்களின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சிகள், அனைத்துத் தமிழர் தேசிய அமைப்புகள், அனைத்து மனித உரிமை அமைப்புகள், ஒடுக்கப்பட்டோர் அமைப்புகள் உள்பட அனைவரும் எத்தகைய வேறுபாடும் இல்லாமல் கலந்துகொள்ள வேண்டுகிறேன். கூடங்குளத்திற்கு அருகே உள்ள இடிந்தகரையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் அதே நாளில் மாபெரும் உண்ணா விரதப் போராட்டம் நடைபெறும். மற்ற இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். கூடங்குளம் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் அந்தப் பகுதி மக்கள் மட்டுமல்ல தென் மாவட்டங்களில் வாழும் பெரும் பகுதி மக்களும் பாதிப்புக்குள்ளாவார்கள் என்பதை நினைவில் கொண்டு கூடங்குளம் மக்களின் போராட்டத்திற்கு ஆதரவாக அணி திரளும்படி அனைவரையும் வேண்டிக்கொள்கிறேன். |